குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்து... ‘மனைவியுடன்’ சேர்த்து ஊருக்கே ‘விஷம்’ வைத்த ‘கொடூரம்’... ‘அதிர்ச்சியை’ ஏற்படுத்திய சம்பவம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jan 08, 2020 11:13 PM

குடும்பத் தகராறில் மனைவியையும், ஊர் மக்களையும் கொலை செய்ய ஒருவர் குடிநீரில் விஷம் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Nilgiris Man Poisons Public Water Supply To Kill Wife

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கர்க்கப்பாலி பழங்குடியின கிராமத்தில் 18 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள பேரூராட்சி குழாயில் குடிநீர் விநியோகிக்கப்பட்டபோது, வழக்கத்துக்கு மாறாக தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. அதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் உடனடியாக போலீசாருக்கு அதுபற்றி தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் விஜயசண்முகநாதன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாபு, தலைமைக் காவலர் குமரன், காவலர் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதற்குள் பேரூராட்சி நிர்வாக அலுவலர்களும் அங்கு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் குழாயில் விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் பரிசோதித்துப் பார்த்தபோது, அதில் திம்மட் என்ற வி‌‌ஷம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் குடிநீர் குழாய்களை பரிசோதித்தபோது, யாரோ ஒருவர் குழாயைக் கழட்டி அதனுள் வி‌‌ஷத்தை அடைத்து குழாயை மீண்டும் மூடியிருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜன் (45) என்பவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. பின்னர் போலீஸ் விசாரணையில் ராஜன், “குடும்பத் தகராறில் மனைவியையும், ஊர் மக்களையும் கொலை செய்யவே குடிநீரில் விஷம் கலந்தேன்” என ஒப்புக்கொண்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசியுள்ள அந்த ஊர் மக்கள், “ராஜனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட, அதை ஊர்மக்களில் சிலர் தட்டிக்கேட்டார்கள். அதனால் ஆத்திரமடைந்த ராஜன் மனைவியையும், ஊர் மக்களையும் கொலை செய்வதற்காக குடிநீர் குழாயில் விஷத்தைக் கலந்து வைத்துள்ளார். தலைமறைவாகியிருந்த ராஜனை பிடித்து விசாரித்த போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.

Tags : #CRIME #MURDER #NILGIRIS #HUSBAND #WIFE #WATER #POISON