‘மனைவிக்கு பாடம் புகட்டவே செய்தேன்’.. ‘குழந்தைகளைக் கூட்டிப்போய்’.. ‘கொடூர தந்தை கொடுத்த உறையவைக்கும் வாக்குமூலம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Nov 14, 2019 04:40 PM
நாமக்கல்லில் மனைவியுடனான தகராறில் தந்தையே குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை அருகே உள்ள அரசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சிரஞ்சீவி - பாக்கியம். இவர்களுடைய குழந்தைகள் கிரிதாஸ் (8), கவிதர்ஷினி (5). தினமும் சிரஞ்சீவி குடித்துவிட்டு வந்து துன்புறுத்தி வந்தததால் கொடுமை தாங்க முடியாமல், பாக்கியம் 2 குழந்தைகளுடன் தன் பெற்றோர் வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டுக்குச் சென்ற சிரஞ்சீவி, அவர்களிடம் சமாதானமாகப் பேசி மனைவியையும், குழந்தைகளையும் தன்னுடன் அனுப்புமாறு கேட்டுள்ளார். அதையடுத்து அவர்கள் 2 குழந்தைகளை மட்டும் சிரஞ்சீவியோடு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் சிரஞ்சீவி குழந்தைகளை 2 நாட்களாக பள்ளிக்கு அனுப்பாததால் சந்தேகமடைந்த பாக்கியம் குழந்தைகளோடு பலமுறை பேச முயற்சித்தும் முடியாமல் போயுள்ளது. இதனால் சந்தேகம் அதிகமாக பாக்கியம் இதுகுறித்து கொல்லிமலை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அதனடிப்படையில் போலீஸார் சிரஞ்சீவியிடம் விசாரித்ததில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரஞ்சீவி போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 2 குழந்தைகளையும் கூட்டிப்போய் தான் கொல்லி மலை அருகே உள்ள சீக்குப்பாறை எனும் இடத்தில் உள்ள வியூ பாயிண்ட்டில் இருந்து வீசி எறிந்து கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு உறைந்துபோன போலீஸார் மேலும் விசாரித்ததில் மனைவியைப் பலமுறை தன்னுடன் வருமாறு அழைத்தும் வராததால் ஆத்திரத்தில் அவருக்கு பாடம் புகட்டவே இப்படி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து சிரஞ்சீவி அளித்த தகவலின்படி குழந்தைகளின் உடல்களை மீட்ட போலீஸார் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
