'ஒரு சேலை வாங்கயாவது...' 'இந்த பணத்த வாங்கிக்கோங்க பாட்டி...' 'கெடைக்காதுன்னு நெனச்சது கெடச்சப்போ...' 'அழுகையே வந்திடுச்சு...' - மூதாட்டியின் நேர்மை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் சின்னமனூர் அடுத்த ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிபவர் செல்லம்மாள் (75). இவர் வழக்கம்போல் பணி முடித்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ரோட்டில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தார், அந்த பையினுள் நிறைய பணம், 4 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியவந்தது.

நமக்கு சொந்தமில்லாத பொருள் நமக்கு கிடைத்தாலும் அந்த பொருள் உரியவரிடம் சென்று சேர்வது தான் முறை என, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஹைவேவிஸ் காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தார்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த பணம் உத்தமபாளையத்தை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. இதனை அடுத்து, சாகுல் ஹமீதை தொடர்புகொண்டு பேசிய போலீசார், அவரை ஹைவேவிஸ் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வழைத்தனர்.
அங்கு வைத்து செல்லம்மாளின் கைகளால் தொலைத்த பணம் மற்றும் ஆவணங்களை சாகுல் ஹமீதிடம் வழங்கி செல்லம்மாளை பெருமை படுத்தினர்.
தொலைந்த ஆயிரக்கணக்கான பணம் திரும்ப கிடைத்ததால் ஆனந்த கண்ணீருடன், 50 % பணத்தை மூதாட்டியிடம் வாங்கிக்கொள்ளுமாறு வற்புறுத்தினார்.
ஆனால் அதனை ஆனந்த கண்ணீருடன் செல்லம்மாள் வாங்க மறுத்து விட்டார். பின்னர், காவல் துறையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, அன்பின் நிமித்தமாக ஒரு புதிய சேலை வாங்குவதற்கான தொகையை மட்டும் புன்னகையோடு கலந்த ஆனந்தக் கண்ணீரோடு பெற்றுக்கொண்டார். மூதாட்டியின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

மற்ற செய்திகள்
