'2 பேரும் கையில ஆயுதம் வச்சிருப்பாங்கன்னு தெரியும்...' 'ஆனா அதவிட அவங்களோட அழுகை தான் என் கண்ணு முன்னாடி வந்து நின்னுச்சு...' 'டிராபிக்ல ஓடியே சேஸ்...' - சிங்கிள் ஆளா கெத்து காட்டிய ஹீரோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திக்(19). இவர் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர் நேற்று (16-02-2021) மாலை 6.30 மணியளவில் நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கே
நடுத்தர வயது பெண்மணி ஒருவர் தனது கையில் குழந்தையுடன் நின்று அழுதுக்கொண்டு நின்றுள்ளார்.
அந்த பெண் கைப்பையில் ரூபாய் ஒரு லட்சம் பணம் வைத்திருந்ததும், அந்த பணப்பையை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் பறித்து சென்றதினால் அழுகிறார் என்பது தெரிய வந்தது.
இதனை அறிந்த கார்த்திக் பைக்கில் சென்று அந்த இரண்டு திருடர்களையும் சேஸ் செய்துள்ளார்.
ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக திருடர்களை தொடர்ந்து பைக் கொண்டு துரத்த முடியவில்லை. இதனால் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, இரு திருடர்களை நோக்கி ஓடத் தொடங்கி உள்ளார்.
சுமார் 30 மீட்டர் தூரம் ஓடி திருடர்களின் சட்டையை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவர்கள் மீது பாய்ந்து அடித்துள்ளார். அதில் ஒரு திருடன் தனது இடுப்பில் இருந்து கத்தியை உருவ தயாராக எடுக்க முடியாதபடி கார்த்தி தடுத்து திருப்பி தாக்கியுள்ளார்.
அருகில் இருந்த பொதுமக்கள் உடனே அங்கு வந்து திருடர்களை பிடித்துள்ளனர்.
இதன்பிறகு, திருட்டு போன பணத்தை உரிய அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, திருடர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனார்.
விசாரணையில் சைதாப்பேட்டையைச் சேர்ந்த அவர் முக்தார் உசேன்(21) என்பது தெரியவந்தது. மேலும் அவருடன் வந்த மற்றொரு திருடன் பெரம்பரை சேர்ந்த ஹாலித் என்பதும் தெரியவந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த பைக்கும் திருட்டு பைக் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வாடகை வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வரும் கார்த்திக் பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக பாக்ஸிங் கற்று வந்துள்ளார். கல்லூரி செல்லும் கார்த்திக் தனது பெற்றோர்கள் நடத்தும் தெருவோர தள்ளுவண்டி பிரியாணி கடையில் கார்த்திக் மாலை நேரங்களில் பணிபுரிந்து அந்த பணத்தில் கல்லூரி படிப்பை படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து கூறுகையில், "திருடர்கள் ஆயுதம் வச்சிருப்பாங்கன்னு எண்ணம் இருந்தாலும் அந்த பெண்ணோட அழுகதான் கண் முன்னாடி இருந்துச்சு" என்று கூறியுள்ளார். மேலும் படித்து காவல்துறை அதிகாரி ஆவது தான் லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
"உயிரை பணையம் வச்சி குற்றவாளிகளை பிடிச்சு அவங்ககிட்ட இருந்து பணத்தை மீட்டுக் கொடுத்த என் பையன நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு. பாக்ஸிங் கிளாஸ் போறப்போ பயமா இருந்துச்சு, ஆனா எனக்கு இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு" என்று கூறி பூரிப்படைகிறார் அவரது தாய் கலைவாணி. வீரத்துடன் செயல்பட்ட கார்த்திக்கை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
