'இந்த பென் சூப்பரா எழுதும்...' 'இத வச்சு செக் FILL பண்ணுங்க...' 'இது நார்மல் பென் கெடையாது, அதுக்கு பின்னாடி இருந்த தில்லாலங்கடி...' - கார் வாங்கியவர்களிடம் நூதன மோசடி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் மேஜிக் பேனாவை வைத்து செக் மூலம் பல லட்சங்களை சுருட்டிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி பரீதாபாத் நகரில் மோசடி கும்பலை சேர்ந்த சிலர் தங்களை ஆட்டோமொபைல் துறையின் அதிகாரிகள் எனக் கூறி கொண்டு கார் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் பணம் பறித்து ஏமாற்றியுள்ளனர்.
கார் வாங்கிய உரிமையாளர்களிடம் அவர்களின் காருக்கு நீண்ட கால வாரண்டி கொடுப்பதாகவும், அதற்காக 1100 ரூபாய் மட்டும் உரிமையாளர்கள் செலுத்த வேண்டுமென கூறி, காசோலை மூலம் பணத்தை பெற்றுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் காசோலையில் இந்த கும்பல் அவர்களின் மேஜிக் பேனாவை கொடுத்து, அதனை பயன்படுத்தி பூர்த்தி செய்ய சொல்லி அதன் மூலம் லட்ச கணக்கில் பணத்தை பறித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கூறிய காவல் துறை அதிகாரி, 'இந்த மோசடி கும்பல் செல்லும் இடங்களில் எல்லாம் தங்களிடமுள்ள மேஜிக் பேனாவை கொடுத்து, இது நன்றாக எழுதும் என காசோலையில் பூர்த்தி செய்ய சொல்லியுள்ளனர். அப்படி செய்தால் சில மணி நேரங்களில் அந்த பேனாவின் மை அழிந்து விடும். பின்னர் அந்த காசோலையில் லட்ச கணக்கில் பணத்தை எழுதி, சம்மந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கிலிருந்து எடுத்துள்ளனர். இந்த விவகாரம் எங்களது கவனத்திற்கு வர விசாரித்ததில் நான்கு பேர் சிக்கியுள்ளனர்' எனக் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த புகாரின் பேரில் இவர்களை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
