'கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்துக்கு...' 'ரூ.50 லட்சம் நிதி உதவி...' 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை...'- தமிழக முதல்வர் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவியும், அவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளாராக பணியாற்றி வந்தவர் பாலு. ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொற்கை விலக்குப் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக லாரி ஓட்டிக்கொண்டு வந்த முருகவேல் என்பவரை தடுத்து நிறுத்தினார்.
வாகனம் இயக்கி வந்த முருகவேல் குடிபோதையில் இருப்பது தெரியவர, அவரிடமிருந்து வாகனத்தைப் பறிமுதல் செய்துவிட்டு ஓட்டுநரை எச்சரித்து அனுப்பி வைத்தார் எஸ்.ஐ.பாலு. இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், நள்ளிரவு 02.00 மணி அளவில் மற்றொரு லாரியில் வந்து வாகனச் சோதனை செய்துகொண்டிருந்த எஸ்.ஐ.பாலு மீது ஏற்றிக் கொலை செய்து விட்டுத் தப்பியோடினார். கொலையாளியை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், முருகவேல் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையே, லாரி ஏற்றி கொலை செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவியை முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பணியின் போது உயிரிழந்த உதவி ஆய்வாளர் பாலு குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்றும், காயம் அடைந்த காவலர் பொன் சுப்பையாவுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
