இறந்துட்டாருன்னு திதி கொடுத்த குடும்பம்.. 25 வருசம் கழிச்சு தெரிய வந்த உண்மை.. இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை தாம்பரத்தை அடுத்த சானிடோரியம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், சாலையோரம் ஒருவர் வாழ்ந்து வருவதாக காவல்துறையின் காவல் கரங்கள் அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், சம்பவ இடம் சென்ற காவல் கரங்கள் அமைப்பினர், அந்த நபரை கண்டறிந்து அவரிடம் விசாரணையும் மேற்கொண்டனர்.
அப்போது அவரது பெயர் டேவிட் துரைராஜ் என்பதும், கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும் டேவிட் குறித்து அறிய வந்த தகவலின் படி, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு அவர் வெளியேறி வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை வந்த டேவிட் துரைராஜ் பல்வேறு பகுதிகளிலும் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது. இறுதியாக தாம்பரம் சானிடோரியம் பகுதியில் தங்கி குப்பையில் உள்ள பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை எடுத்து விற்றும் பிழைப்பு நடத்தி வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அதே போல, சிறிது மனநலம் பாதிக்கப்பட்டிருந்த டேவிட் துரைராஜ், குப்பைகளை எடுப்பதற்காக சக்கரங்களை கொண்ட பிரத்யேக வாகனம் ஒன்றை உருவாக்கி இருந்ததும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து அவரை மீட்ட காவல் கரங்கள் அமைப்பினர், காப்பகத்தில் சேர்த்து உரிய மருத்துவ சிகிச்சை வழங்கினர். இதன் பின், கோவில்பட்டியில் உள்ள உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் சொன்ன தகவல், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி இருந்தது. திருமணமான டேவிட்டுக்கு, ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் துரைராஜின் மனைவியும் இறந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, வீட்டில் இருந்து மனஉளைச்சலால் துரைராஜ் வெளியேறியதாக சொல்லப்படும் நிலையில், சென்னைக்கு சென்றுள்ளார். அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களும் தேடி வந்துள்ளனர். நீண்ட நாட்களாக அவர் திரும்ப வராததால் சுனாமியில் சிக்கி, டேவிட் துரைராஜ் இறந்து போயிருப்பார் என்றும் கருதி திதி கொடுத்தும் வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், தற்போது டேவிட் துரைராஜ் உயிருடன் திரும்பி உள்ளது அவரது குடும்பத்தினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர் லோகநாதன் முன்னிலையில், காவல் கரங்கள் அமைப்பினர் முன்னிலையில், அவரது உறவினர்களிடமும் டேவிட் ஒப்படைக்கப்பட்டார். இறந்ததாக கருதப்பட்டு வந்த நபர், தற்போது உயிருடன் திரும்பி உள்ள சம்பவம் அதிகம் வைரலாகி வருகிறது.