சிசிடிவி கேமராவிற்கு ‘ஸ்பிரே’.. ‘ஹாலிவுட்’ படம் பார்த்து.. வேலை இழந்த ‘சென்னை இன்ஜினியர்’ போட்ட திட்டம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Dec 06, 2019 06:26 PM
சென்னையில் சிசிடிவி கேமராவிற்கு ஸ்பிரே அடித்து ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்ட இன்ஜினியர் போலீஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.
சென்னை ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு 5ஆம் தேதி அதிகாலை மும்பையில் இருந்து ஒரு ஃபோன் வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர், “உங்கள் பகுதியில் உள்ள எங்கள் வங்கியின் ஏடிஎம் கிளையில் கொள்ளையன் புகுந்துள்ளான். சிசிடிவி கேமாராவிற்கு ஸ்பிரே அடித்துவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டிருக்கிறான்” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அங்கு கொள்ளையில் ஈடுபட்ட இளைஞரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்றபோது ஏடிஎம் இயந்திரத்தை கடப்பாறையால் உடைத்துக்கொண்டிருந்த அந்த இளைஞர் போலீஸாரைப் பார்த்ததும் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார். அதற்குள் அவரை வளைத்துப் பிடித்த போலீஸார் அவர் பயன்படுத்திய ஸ்பிரே, கடப்பாறை, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர் போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் உதயசூரியன் என்பதும், அவர் திருநின்றவூர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருவதும் தெரியவந்துள்ளது. டிப்ளமோ இன்ஜியரிங் படித்துள்ள உதயசூரியன் சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஒரு கார்பரேட் நிறுவனத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்துவந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் அந்த நிறுவனம் திடீரென மூடப்பட்டதால், வேலை இழந்த உதயசூரியன் 20 ஆயிரம் சம்பளத்திற்கு வேறொரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
இதையடுத்து பணத்தேவை காரணமாக ஏடிஎம் மையங்களில் கொள்ளையடிக்க திட்டமிட்ட உதயசூரியன், அதற்காக சில ஹாலிவுட் படங்களைப் பார்த்தும், இணையத்தில் ஏடிஎம் கொள்ளை தொடர்பான சில தகவல்களை சேகரித்தும் தயாராகி உள்ளார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வரும் வழியில் ஆள் இல்லாத ஏடிஎம் மையங்களில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஏற்கெனவே ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளை அடித்துள்ள அவர் 2 ஏடிஎம்களில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார். இதுவரை அவர் 4 லட்சம் ரூபாய் வரை கொள்ளை அடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே கொள்ளை அடித்தபோது கேமராவில் அவருடைய உருவம் சரியாகத் தெரியாததால் தப்பித்த உதயசூரியன், தற்போது வங்கியின் தலைமை அலுவலக கேமராவால் போலீஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.