'வயிறு வலிக்குதுனு' சொல்லிட்டு... 'ஹாஸ்டலில்' மாணவர் செய்த காரியம்... 'அதிர்ந்து' நின்ற சக மாணவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 20, 2019 11:58 AM

கோவை அருகே பள்ளி விடுதியில் 11-ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11th std male student committed suicide in school hostel

சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார். கோழிக்கடை இறைச்சி வியாபாரியான இவரது மகன் ஹரீஸ், காரமடை கண்ணார்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், 11-ம் வகுப்பு கணினி அறிவியல் படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், நேற்று மதியம் வயிறு வலிப்பதாக ஆசிரியரிடம் கூறிவிட்டு, வகுப்பறையிலிருந்து ஹரீஸ் விடுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாலை வகுப்புகள் முடிந்தப் பின்பு விடுதிக்கு சக மாணவர்கள் திரும்பி வந்துள்ளனர். அப்போது, ஹாஸ்டலில் இருந்த மின் விசிறியில் தூக்கில் தொங்கியவாறு, மாணவர் ஹரீஸ் இருந்துள்ளார்.

இதனைப் பார்த்து மாணவர்கள் அதிர்ந்து போயினர். பின்னர், மாணவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காரமடை போலீசார், உயிரிழந்த ஹரீஸின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்து வந்த ஹரீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், உரிய தகவல் அளிக்காமல் எப்படி ஹரீஸின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பலாம் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், ஹரீஸ்-க்கு முன்பு மற்றொரு மாணவரும் அந்தப் பள்ளியில் தற்கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் பள்ளி நிர்வாகம் மிகவும் கண்டிப்புடன் செயல்படுவதாகவும், அதனாலேயே ஹரீஸ் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிகிறது. ஆனால், இதனை பள்ளி நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #STUDENT #COIMBATORE