பிரபல ‘சென்னை’ கல்லூரியில்... சடலமாக மீட்கப்பட்ட... ‘ஆசிரியை’ மரணத்தில் ‘திடீர்’ திருப்பம்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Dec 19, 2019 03:20 PM

பிரபல தனியார் கல்லூரி வகுப்பறையில் ஆசிரியை இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பமாக அதே கல்லூரியின் பேராசிரியர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Professor Faces Enquiry In DGVaishnava Teachers Suicide

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியின் வகுப்பறையில் இருந்து ஹரிசாந்தி என்பவர் நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஹெச்டி பட்டதாரியான ஹரிசாந்தி அதே கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை செய்துவந்ததும், 5 ஆண்டுகளுக்கு முன் அவர் அந்த வேலையை ராஜினாமா செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்துவந்த அவர் அடிக்கடி அந்தக் கல்லூரிக்கு வந்து தனது நண்பர்களை சந்தித்து செல்வது வழக்கம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஹரிசாந்தி அந்தக் கல்லூரியில் யாரையெல்லாம் சந்தித்தார் என்ற பட்டியலை சேகரித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அப்போது அவர் அதே கல்லூரியில் வேலை செய்யும் பேராசிரியர் ஒருவரை அடிக்கடி சந்தித்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்தப் பேராசிரியரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்தப் பேராசிரியர், “படிக்கும் போதிருந்தே எனக்கு ஹரிசாந்தியைத் தெரியும். ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த நாங்கள் இருவரும் இந்தக் கல்லூரியின் தெலுங்கு டிபார்ட்மென்டில் வேலைக்குச் சேர்ந்தபோது நட்பாகப் பழகி, பின்னர் காதலித்தோம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு வேறு பெண்ணுடன் திருமணமானது. எனக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், வேலையை விட்டுச் சென்ற பிறகும் அடிக்கடி ஹரிசாந்தி கல்லூரிக்கு வந்து என்னைப் பார்த்துச் செல்வார்.

அப்போது அவர், ‘நீ மட்டும் குடும்பம், குழந்தைகள் என ஜாலியாக இருக்கிறாய். ஆனால் நான் மட்டும் உனக்காக இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக இருக்கிறேன்’ எனக் கூறுவார். சம்பவத்தன்றும் என்னை சந்திக்க கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போதும், ‘நீ என்னை திருமணம் செய்துகொள்ளாமல் ஏமாற்றிவிட்டாய்’ எனக் கூறினார். பின் மற்ற நண்பர்களைப் பார்க்க சென்றுவிட்டார். நானும் வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன்பின்னர் தான் அவர் தற்கொலை செய்துகொண்டது எனக்கு தெரியவந்தது” எனக் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே ஹரிசாந்தியின் சகோதரர் மணிகண்டன் இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஹரிசாந்தியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் அவருடைய இடது கையில் கத்தியால் வெட்டிய காயம் உள்ளதால் அது குறித்தும் விசாரித்து வருகிறோம், பிரேதப் பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகே அவருடைய மரணத்துக்கான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மன அழுத்தம், மன உளைச்சல் உள்ளவர்கள் Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours), State suicide prevention helpline – 104 (24 hours), iCall Pychosocial helpline – 022-25521111 ( Mon – Sat, 8am – 10pm) போன்ற இலவச ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் அதிலிருந்து வெளிவர ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

Tags : #DGVAISHNAVA #CHENNAI #COLLEGE #SUICIDE #TEACHER