2 குழந்தைகளுடன் தாய் எடுத்த 'விபரீத' முடிவு... சேலம் அருகே நடந்த ‘சோக’ சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Dec 18, 2019 10:59 AM

சேலம் அருகே இளம் பெண் ஒருவர், தனது குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

mother committed suicide with her 2 girl children near salem

சேலம் அம்மாப்பேட்டையில் வசித்து வருபவர் சங்கர். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு திவ்யஸ்ரீ(12), ஸ்ரீமதி(6) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கவிதாவின் மருத்துவச் செலவுக்காகவும், குடும்பச் செலவுக்காகவும், 2 லட்சம் ரூபாய் வரை சிலரிடம் கணவர் சங்கர் கடன் பெற்றிருந்தார். அதனை சரிவர கட்டாததால் பணம் கொடுத்தவர்கள் சங்கரின் வீட்டிற்கு வந்து, அவ்வப்போது சத்தம் போட்டு வந்துள்ளனர்.

இதனால் கவிதா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், கடந்த செவ்வாய்கிழமை அன்று இரவு, உறவினர் ஒருவரிடம் சங்கர் பணம் பெறச் சென்றிருந்தார். அப்போது, தனது மகள்கள் இருவருக்கும் அரளி விதையை அரைத்துக் கொடுத்துவிட்டு, தாமும் சாப்பிட்டு கவிதா தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர், 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சேலம் அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே கவிதா உயிரிழந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் மூத்த மகள் உயிரிழந்தார். இளைய மகளுக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

Tags : #SUICIDE #MOTHER #DAUGHTER