‘திறந்திருந்த வீடு’.. ‘மகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடூரம்’.. கணவரின் பகீர் வாக்குமூலம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Jan 11, 2020 07:26 PM

மதுரையில் மனைவியை கூலிப்படை அனுப்பி கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Husband murdered his wife for property in Madurai

மதுரை ரேஸ்கோர்ஸ் சாலை, பாரதி உலா வீதியை சேர்ந்தவர் குமரகுரு (35). இவரது மனைவி லாவண்யா (33). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு, லாவண்யா தனது மகள்களுடன் வீட்டின் முதல் மாடியில் படுத்திருந்துள்ளார். தரைதளத்தில் குமரகுருவும், ஹாலில் அவரது தாயார் சீனியம்மாளும் படுத்திருந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டுக்குள் புகுந்த இருவர் நேராக மாடியில் தூங்கிக்கொண்டிருந்த லாவண்யாவை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். அப்போது கண்விழித்த மூத்த மகள், தனது கண் எதிரே தாயை இருவர் கத்தியால் குத்துவதைக் கண்டு அலறி அடித்துக்கொண்டு கீழே ஓடி பாட்டியிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்களை தடுக்க வந்த பாட்டியையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

வீட்டுக்குள் சத்தம் கேட்டு உள்ளே வந்த குமரகுரு தாய் மற்றும் மனைவி கத்தியால் குத்துப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதில் லாவண்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சீனியம்மாளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் நடந்தபோது சிசிடிவி கேமரா ஆப் செய்து இருந்ததும், வீடு திறந்து இருந்தும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் விசாரணையில் வீட்டின் சாவி குமரகுரு மற்றும் சீனியம்மாள் ஆகிய இருவரிடம் மட்டுமே இருந்தது என போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் குமரகுருவிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். பின்னர் போலீசார் மேற்கொண்ட கிடுக்குப்பிடி விசாரணை மனைவியை கூலிப்படை வைத்து கொலை செய்ததாக குமரகுரு தெரிவித்துள்ளார்.

அதில், தனது தந்தை இறந்த பிறகு அவர் நடத்தி வந்த பாத்திரக்கடையை இருவரும் கவனித்து வந்தோம். நான் கொஞ்சம் ஆடம்பரமாக செலவு செய்வதால் பாதி சொத்தை எனது மனைவியின் பேரில் எனது தந்தை எழுதி வைத்தார். இந்த நிலையில் வியாபாரம் குறைந்ததால் சொத்தை விற்று செலவு செய்தேன். பின்னர் மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்காக அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் தர மறுத்துவிட்டார்.

அதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். இதுகுறித்து தனது கடையில் வேலை பார்க்கும் அலெக்ஸ் என்பவரிடம் கூறி கூலிப்படையை தயார் செய்தேன். அதற்காக 1 லட்சம் முன்பணமாக கொடுத்தேன். சில நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றோம். அப்போது எனது மனைவியை கொலை செய்ய முயன்றபோது தலையில் மட்டும் வெட்டு விழுந்து தப்பித்துக் கொண்டார். அதனால் வீட்டில் வைத்துக் கொலை செய்ய முடிவெடுத்தோம் என தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குமரகுரு மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த அலெக்ஸ் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்திற்காக மனைவியை கூலிப்படை வைத்து கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CRIME #MURDER #MADURAI #HUSBAND