ஜல்லிக்கட்டு: காளையை அடக்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு... இவங்களுக்கு எல்லாம் அனுமதி இல்ல!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 09, 2020 12:18 PM

தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை, இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இந்த பொங்கல் பண்டிகையின் மிக முக்கியமான வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலக அளவில் பிரபலமானது.

Only 21 year old players can compete in the Jallikattu

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைப்பெற்றாலும்,  மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இதில் ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும், மாடு வளர்ப்போரும் தங்கள் காளைகளுடன் உற்சாகத்துடன் பங்கேற்பார்கள். பொங்கல் தினத்தன்று 15-ந் தேதி அவனியாபுரத்திலும், மறுநாள் 16-ந் தேதி பாலமேட்டிலும், 17-ந் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் 5 நாட்களே உள்ளது. இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மாடுபிடிக்கும் வீரர்களுக்கு 21 வயது இருந்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை 18 வயது இருந்தாலும் மாடுபிடிக்க முடியும் என்ற விதி இருந்த நிலையில், இந்த ஆண்டு 21 வயது முதல் 45 வயதுடையவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இளைய வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மாடுபிடிக்கும் வீரர்களுக்கு அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நாளை உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளது. ஜனவரி 16-ம் தேதி பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஜனவரி 11-ம் தேதி அன்று உடற் தகுதி தேர்வு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

Tags : #JALLIKATTU #MADURAI #PONGAL #RULES