'தம்பதியை தாக்கி வழிபறி'... 'ஏ.டி.எம். கார்டால் சிசிடிவியில் சிக்கிய இளைஞர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 30, 2019 05:45 PM

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தம்பதியை தாக்கி கொள்ளையடித்த இளைஞர்கள், ஏ.டி.எம். மைய சி.சி.டி.வி. காட்சியில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

husband and wife attacked by youth and snatching the bag

திருவட்டார் அருகே செறுகோல் பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவருடைய மனைவி ஜெபஷீபா புளோரா அங்கன்வாடி பணியாளராக உள்ளார். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன், கல்லங்குழியில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு இருசக்கர வாகனத்தில், சென்றனர். விழா முடிந்த பின்பு இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

செறுகோல் அருகே வந்தபோது திடீரென ஒரு இரு சக்கர வாகனம், அவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை வழிமறித்தபடி வந்து நின்றது. அதில் இருந்த 3  இளைஞர்களில் ஒருவர், ஜெபஷீபா புளோரா வைத்திருந்த பையை பிடுங்கிச் சென்றார். அந்தப் பையில் 1 பவுன் நெக்லஸ், 10 ஆயிரம் ரூபாய் பணம், 3 ஏ.டி.எம். கார்டு போன்றவை இருந்தன.

இதைப் பார்த்த கணவன், மனைவி இருவரும் சத்தம் போட்டனர். உடனே, அந்த இளைஞர்கள் பணம், நகையுடன் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களை தேடி வந்தனர்.

கணவன், மனைவியை வழிமறித்து நடந்த இந்த துணிகரச் சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் 3 ஏ.டி.எம். கார்டுகளின் கவர்களில் எழுதி வைக்கப்பட்டிருந்த பின் நம்பர்களைக் கொண்டு, கொள்ளையர்கள் 7 ஆயிரம் ரூபாயை எடுத்தனர். இது ஜெபஷீபாவின் செல்ஃபோனுக்கு வந்த குறுந்தகவல் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து வங்கியை தொடர்பு கொண்ட ஜெபஷீபா, அந்த நேரத்தில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தவர்களின் சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை தருமாறு கேட்டுப் பெற்றார். இந்த சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு 3 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #THEFT