'ரயில்களில் ஏ.சி. கோச்சில் பெண்களிடம் நகைகள் திருடி'.. 'மலேசியாவில் ஹோட்டல் வாங்கிய பலே கொள்ளையர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 17, 2019 05:03 PM

ரெயில்களில் கொள்ளையடித்த நகைகளை விற்று, அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்து, மலேசியாவில் ஓட்டல் வாங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Tamil nadu train robbery man owns hotel in malaysia

கடந்த 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளில் குளிர் சாதன பெட்டிகளில் பயணிக்கும் பெண்களின் நகைகள் திருடுப்போவதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட ரெயில் பயணிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க ரெயில்வே டி.ஜி.பி. சைலேந்திர பாபு அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

நள்ளிரவில் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க, டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க ரயில்நிலையங்களில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து சென்னை எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் சந்தேகத்தின்பேரில், தனியாக நின்றிருந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்குப் பின் முரணமாக பதில் அளித்தார்.

அதன்பின்னர் அவரை ரயில் நிலைய காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. அந்த நபர் கேரளாவின், திருச்சூரை சேர்ந்த சாகுல் ஹமீது என்பதும் அவர் மலேசியாவில் ஓட்டலை குத்தகைக்கு எடுத்து, தனது மனைவி சஹானாவோடு சேர்ந்து நடத்தி வருவதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், இவர் மலேசியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து, ரயில்களில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்வது தெரியவந்தது.

அவ்வாறு பயணிக்கும்போது, இரவு நேரங்களில் பெண்கள் அயர்ந்து தூங்கும்நேரம், அவர்களின் நகைகளை திருடி அவற்றை மும்பை மற்றும் திருச்சூரில் விற்று பணமாக்கியதும் அம்பலமாகியுள்ளது. இதுபோல, தமிழகத்தில் 29 ரயில்களில் கிட்டத்தட்ட 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான 110 சவரன் வரை, இவர் நகை திருடி இருப்பது தெரியவந்ததையடுத்து, அந்த நபரை திருச்சூர் மற்றும் மும்பைக்கு அழைத்து சென்ற போலீசார், அங்கு அவர் விற்ற நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் பல மொழிகளில் பேசும் சாகுல் ஹமீது, முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, சஹானா என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஜாஸ்மீன் என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நாக்பூர் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக மோசடியிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

இது தவிர பல்வேறு வெளிநாடுகளுக்கும் சாகுல் ஹமீது சுற்றுலா சென்றுள்ளார். ஹமீதை 10 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர். இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்கு உதவிய ரெயில்வே போலீசாருக்கும் சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : #THEFT #ARRESTED #CHENNAI