‘இத்தாலியில் இருந்து வந்த மகன் குடும்பத்தால் பாதிப்பு’... ‘90 வயதில் கொரோனாவை வென்று’... ‘நாட்டுக்கே நம்பிக்கையூட்டிய முதிய தம்பதி’... ‘கைதட்டி ஆரவாரம் செய்த கேரளா மருத்துவர்கள்’... ‘ஆனாலும் செவிலியருக்கு நேர்ந்த சோகம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 31, 2020 01:12 PM

கேரளாவில் 93 மற்றும் 88 வயது முதிய தம்பதி கொரோனாவை வென்று குணமடைந்திருப்பது நாட்டுக்கே நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது. ஆனாலும் அதில் ஒரு சோகமும் உள்ளது.

Good news! Kerala elderly couple recovers from Covid-19

இந்தியாவிலேயே கேரளா (234) மற்றும் மகாராஷ்டிரா (238) ஆகிய மாநிலங்களில்தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. இந்நிலையில், இத்தாலியில் இருந்து கடந்த பிப்ரவரி 29-ம் தேதி திரும்பிய மகன், மருமகள் மற்றும் பேரனால், வீட்டில் உள்ள 93 வயதான தாமஸ், அவரின் மனைவி 88 வயதான மரியம்மா ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானார்கள்.

இவர்களுக்கு மார்ச் 8-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர்களது உறவினர்கள் 2 பேர் என மொத்தம் 7 பேர் கோட்டயம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்ப நாட்களில் முதிய தம்பதியை தனித்தனியே அவரசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தபோது இருவரும், வீட்டுக்குப் போக வேண்டும் என்று அடம்பிடித்து சாப்பிடாமலும் செவிலியர்களுக்கு ஒத்துழைக்காமலும் இருந்துள்ளனர். மேலும் மூப்பு காரணமாக, நெஞ்சுவலி, சிறுநீரக தொற்று, கடுமையான இருமல், மூச்சுத் திணறல் இருந்ததால், வெண்டிலேட்டர் உதவியும் தேவைப்பட்டது.

பின்னர் சமயோஜிதமாகச் செயல்பட்டு,  வயதான தம்பதிகளை ஒரே அறையில் வைத்து சிகிச்சை அளித்ததுடன், அவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள், அவர்களிடம் அன்பாகவும் நடந்துகொண்டனர்.  சிகிச்சைக்குப் பிறகு, முதிய தம்பதி உட்பட 7 பேருக்கும் கொரோனா டெஸ்ட் செய்ததில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அவர்களுக்கு கேக் வெட்டி, கைதட்டி மருத்துவர்கள், ஊழியர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

எனினும், இந்த முதிய தம்பதியை அன்பாகக் கவனித்துக்கொண்ட செவிலியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சுகாதாரத்துறை பக்கபலமாக இருந்து சிகிச்சை அளித்து வருகிறது. முதிய தம்பதியினரை கடும் முயற்சி எடுத்து மீட்ட மருத்துவக் கல்லூரி பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.

Tags : #KERALA #CORONAVIRUS #ELDERLY #COUPLE #ADMINISTRATION #SHAILAJA #THOMAS #POSITIVE #CASES