'உலகத்துக்கு துரோகம் செய்ததா சீனா!?'... சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சரமாரி கேள்வி!... என்ன செய்யப்போகிறது சீன அரசு?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மூடி மறைத்த சீனா உலகத்துக்கு துரோகம் செய்துவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸால் 81,470 பேர் பாதிக்கப்பட்டனர். 3,304 பேர் உயிரிழந்தனர் என்று சீன அரசு தெரிவித்தது.
ஆனால் வூஹான் நகரில் மட்டும் 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஹுபெய் மாகாணத்தின் இதர பகுதிகளையும் சேர்த்தால் உயிரிழப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என்று உள்ளூர் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வூஹானில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சீன அரசு உண்மையை முழுமையாக மூடி மறைத்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கிருக்கிறார் என்பதுகூட யாருக்கும் தெரியவில்லை. இதுதொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகே அவர் வெளியில் தலைகாட்டினார்.
மேலும், வைரஸ் பரவத் தொடங்கியபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த நகருக்கு செல்லவில்லை. சீன பிரதமர் லீ கெகியாங் மட்டுமே வூஹானுக்கு சென்று மருத்துவப் பணிகளை விரைவுபடுத்தினார். வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகே அதிபர் ஜி ஜின்பிங் அங்கு சென்றார்.
கொரோனா வைரஸ் குறித்து முதலில் மக்களை எச்சரித்த வூஹான்நகர மருத்துவர் லீ வென்லியாங் கடந்த ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். வைரஸ் பாதிப்பால் 34 வயதான அந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு சீன அரசு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.
சீன அரசு நினைத்திருந்தால் இந்த வைரஸ் உலகத்துக்கு பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் அந்த நாட்டு அரசு வைரஸ் தொடர்பான உண்மைகளை மூடி மறைத்தது. சீன அரசு அளித்த தகவலின்படி உலக சுகாதார அமைப்பு கடந்த ஜனவரி 15-ம் தேதி ஓர்அறிக்கையை வெளியிட்டது. அதில், கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போதே சீன அரசு உண்மையை கூறியிருந்தால் உலக நாடுகள் விழிப்புடன் செயல்பட்டிருக்கும்.
கொரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் என்று சீன அரசு கூறி வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் சீனாவின் கருத்தை மறுத்து வருகின்றனர். வூஹானில் மட்டுமே சீனாவின் வைராலஜி ஆய்வுக் கூடம் உள்ளது. அந்த ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ்தான் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கொரோனா வைரஸால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் சுமார் 300 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீன அரசே காரணம். வைரஸ் குறித்த உண்மையை ஆரம்பம் முதலே சீன அரசு மூடி மறைத்து வருகிறது. அந்த நாடு உலகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
