கொரோனாவுல இருந்து 'தப்பிக்க' இத மட்டும் 'செஞ்சா' போதும்... 'மீண்டு' வந்த பெண் பேட்டி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 31, 2020 01:26 AM

கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வழியை அதிலிருந்து மீண்டு வந்த பெண் தெரிவித்து இருக்கிறார்.

Coronavirus survivor says staying at home is the only option

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவ ஆரம்பித்து உள்ளது. இதனால் தற்போது இந்திய நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி இருக்கின்றனர். இது தவிர மேலும் பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு துரித கதியில் செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவில் இருந்து தப்பிக்கும் வழியை அதிலிருந்து மீண்டு வந்த பெண் தெரிவித்து இருக்கிறார். குஜராத்தில் உள்ள அஹமதாபாத் பகுதியை சேர்ந்த 34 வயது பெண் ஒருவர் மார்ச் மாத தொடக்கத்தில் பின்லாந்து நாட்டில் இருந்து இந்தியா திரும்பி இருக்கிறார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் தென்பட தொடங்கின. இதையடுத்து அவர் சர்தார் வல்லபாய் படேல் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார்.

கடந்த 18-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து தனிமையில் இருந்து அவர் சிகிச்சை எடுத்து கொண்டார். சிகிச்சையில் நலம் பெற்று அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அவரது பகுதியில் வசிக்கும் மக்கள் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர். இதையடுத்து அவர் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில், கொரோனாவில் இருந்து தப்ப வீட்டில் இருப்பதற்கு பதிலாக வேறு எந்த வழியும் இல்லை என்றே கூறுவேன்.

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்ற எனது முடிவு தவறானது என நான் வருத்தமடைகிறேன்.  நீங்கள் வீட்டில் இருக்கும்வரை பாதுகாப்புடன் இருக்கிறீர்கள். நான் வெளிநாடு சென்றபோது அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் கடைபிடித்தேன். ஆனாலும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நான் ஒவ்வொருவருக்கும் சொல்லும் அறிவுரை என்னவென்றால் வீட்டிலேயே இருங்கள் என்பது தான். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்ளுங்கள்,'' என தெரிவித்து இருக்கிறார்.