‘ஒரு கொலை விசாரணையில் பிடிபட்ட இன்னொரு கொலையின் குற்றவாளிகள்..’ தேனியில் பரபரப்பு..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Jun 11, 2019 06:01 PM
தேனியில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த கூலித்தொழிலாளி நண்பர்களால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
கடந்த ஏப்ரலில் சுருளி அருவியிலுள்ள பூதநாராயண கோவிலிலுள்ள உண்டியல் பணத்தைத் திருட வந்த மர்மநபர்கள் பூசாரி பாண்டியை கோயில் வளாகத்திலேயே கொலை செய்தனர். இந்த வழக்கில் யாரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் சந்தேகத்தின் பேரில் அஜித் குமார், பிரவின் குமார் ஆகியோரிடம் போலீஸார் விசாரித்துள்ளனர்.
பூசாரி வழக்கில் தங்களுக்கு தொடர்பில்லை எனக் கூறிய அவர்களிடம் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் அவர்கள் வேறு ஒரு கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அதிர்ந்துபோன போலீஸார் மேலும் விசாரித்ததில் அவர்களுடைய நண்பன் மனோஜ் குமாரை கொலை செய்ததைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு ஜனவரியில் மனோஜ் குமார் (23) என்பவரைக் காணவில்லை என கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு போலீஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அவரது நண்பர்களே அவரைக் கொலை செய்து புதைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் அஜித் குமார் தான் வைத்திருந்த வேல்கம்பால் மனோஜ் குமாரை குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து உடலை அங்கேயே புதைத்துவிட்டு வந்துள்ளனர். ஒரு கொலையை விசாரிக்கப் போய் இன்னொரு கொலைக்கான குற்றவாளி சிக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.