‘மாம்பழம் உண்டதற்காக’ பட்டியல் இனத்தவருக்கு பஞ்சாயத்து ஆபீஸில் நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Jun 02, 2019 11:44 AM
ஆந்திராவின் கிழக்கு கோதாவரியில் உள்ளது கோலாலா மமிதாடா. இப்பகுதியைச் சேர்ந்த பட்டியலினத்தவரான பிகி ஸ்ரீனிவாஸ்
கடந்த புதன்கிழமை தன் மனைவி மற்றும் குழந்தைகளை, தனது மனைவியின் ஊரில் இறக்கிவிட்டுட்டு, மீண்டும் தன் பைக்கில் மமிதாடாவுக்குத் திரும்பினார். ஆனால் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.
அடுத்த நாள் அங்குள்ள சிங்கம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் தூக்கில் இருந்தவாறு சடலமாக மீட்டெடுக்கப்ப்டார். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. எனினும் அதற்கான தகுந்த லாஜிக் இல்லாத சூழலில், மனித உரிமை கமிஷன் உட்பட பலரும் இந்த வழக்கில் இறங்கி விசாரித்ததில் அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவந்தன.
அதன்படி, மனைவி மற்றும் குழந்தைகளை மனைவியின் ஊரில் விட்டுவிட்டு தன் வீட்டுக்குத் திரும்பியவர், வழியில் ஒரு மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது, கீழே கிடந்த மாம்பழங்களை உண்டதாகவும், அதனைக் கண்ட மாமரத் தோட்ட உரிமையாளர், ஸ்ரீனிவாஸ் மாம்பழங்களைத் திருடியதாகக் கூறி ஆள் வைத்து அடித்ததாகவும் அதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஸ்ரீனிவாஸை அந்த கும்பல், பஞ்சாயத்து அலுவகத்துக்கு இரவோடு இரவாக தூக்கிச் சென்று தூக்கு மாட்டிக்கொண்டதாக கயிறு திரித்துளதாகவும் தெரிய வந்தது.
இதனை அடுத்து, இந்த கொலை விவகாரத்தில் பஞ்சாயத்து ஊழியர் உட்பட 10 பேரும் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டனர். மேலும் பட்டியலின மக்கள் மீது சிங்கம்பள்ளி ஊர்க்காரர்கள் தாக்குதல் நடத்துவதையேத் தொடர்ச்சியாக செய்வதாகவும், அந்த ஊர்க்காரர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி தடுப்புச் சட்டத்தின் கீழ் தகுந்த தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியின் பட்டியல் இன மக்கள் போராடி வருகின்றனர்.