'சென்னையில் தீ விபத்து'... 'குடிசை வீடுகள் எரிந்து சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 18, 2019 02:57 PM
சென்னை பட்டினப்பாக்கத்தில், இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 25- க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீக்கிரையாகின.

சென்னை பட்டினப்பாக்கத்தை அடுத்த டுமீல்குப்பம் பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் இங்குள்ள குடிசை வீடுகளில் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. அடுத்தடுத்து வேகமாக பரவிய தீயால், 25-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீக்கிரையாகின. தீ விபத்தால் சென்னை பட்டினப்பாக்கம் பகுதி முழுக்க அதிகாலையில் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதனால் வீடுகளில் இருந்த பொருட்கள், ஆவணங்கள் என அனைத்தும் தீயில் கருகின. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதன் பின்னர் அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, பட்டினப்பாக்கம், மெரினா மற்றும் மயிலாப்பூர் பகுதிகளில் இருந்து, 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்த வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.
மின்கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து நிகழ்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். நள்ளிரவில் மின்சாரம் இல்லாததால், குடிசை வீடுகளைச் சேர்ந்த மக்கள், அருகில் மெரினா கடற்கரையில் உறங்கினர். ஆனால், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததே விபத்துக்கு காரணம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பகுதியை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
