'ஃபோன' எடுத்தா லொக்கு லொக்குன்னு 'சத்தம்' வருது... எங்க பாத்தாலும் 'கொரோனா' பயம்... 'காப்பாத்துங்க' சார்... நாங்க 'புள்ள' குட்டிகாரங்க... 'துரைமுருகன்' கிச்சு... கிச்சு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டப்பேரவையில் கொரோனா குறித்து திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேசிக்கொண்டது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

சட்டப்பேரவையில், கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து திமுக அளித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், கொரோனா பயம் அதிகமாக இருக்கிறது. போன் எடுத்தால் இருமி கொரோனா என்கிறார். சட்டமன்றத்தின் வெளியே, எங்கு பார்த்தாலும் கொரோனா பயம் உள்ளது. இந்தநிலையில் ஒன்றும் இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "ஏசியில் இருந்தால் கொரோனா பரவுமாம். உறுப்பினர்கள் அனைவரும் பயத்துடன் இருக்கிறோம். காப்பாத்துங்க சார். நாங்க எல்லாம் புள்ள குட்டிகாரர்கள். உறுப்பினர்களுக்கு ஏதாவது ஆனால் இடைதேர்தலை எதிர்கொள்வது மிக சிரமம்" என்று அவர் சொன்னவுடன் அவையில் சிரிப்பலை எழுந்தது.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "கொரோனா பாதிப்பு குறித்து யாரும் அச்சப்பட வேண்டியது இல்லை. 70 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் எதிர்க்கட்சி துணைத் தலைவர் அச்சம் கொள்கிறார் போல" எனத் தெரிவித்தார். முதல்வரின் பதிலுக்கும் அவையில் சிரிப்பலை எழுந்தது.
இந்த விவாதத்தின் போது பேசிய சபாநாயகர், "சட்டப்பேரவையில் ஏசி அளவு குறைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும்போது மாஸ்க் வழங்கப்படும். சட்டப்பேரவைக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.
