'வயசு 58 ஆச்சு'...'நாங்க காத்திருக்கோம்'...'அரசு வேலைக்கு இத்தனை லட்சம் பேரா'?... பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 26, 2020 09:24 AM

கால் காசு வருமானம் என்றாலும், அது அரசு வருமானமாக இருக்க வேண்டும் என்ற கூற்றுக் கிராமங்களில் சொல்லப்படுவது உண்டு. அதற்குக் காரணம் அரசு வேலை என்பது நிரந்தரம், மற்றும் ஓய்வு பெறும் வரை பணி நிரந்தரம் குறித்து எந்த அச்சமும் தேவையில்லை என்பதும் முக்கிய காரணம் ஆகும். இதனிடையே தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர் எண்ணிக்கை குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Tamil Nadu : 68 lakh people enrolled for Govt job and waiting

தமிழகத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ்-2, கல்லூரிப் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். அவ்வாறு பதிவு செய்வோர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவைப் புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதுதவிர தற்போது 18 மாதங்கள் சிறப்புச் சலுகையும் அளிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு தாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 17 லட்சத்து 59 ஆயிரத்து 474 பேர். அதேபோல் 19 முதல் 23 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரையில் 13 லட்சத்து 55 ஆயிரத்து 685 பேர் பதிவு செய்து உள்ளனர். 24 முதல் 35 வயது வரை அரசுப்பணி வேண்டிப் பதிவு செய்து காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 55 ஆயிரத்து 160 பேராகும். அதேபோல் 36 முதல் 57 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவு தாரர்கள் 11 லட்சத்து 29 ஆயிரத்து 472 பேர்.

இதனிடையே அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்கள் பட்டியலில் 58 வயதுக்கு மேற்பட்டவர்களும் உள்ளனர். அதில் 7 ஆயிரத்து 648 பேர் பதிவு செய்து வேலைக்காகக் காத்து இருக்கின்றனர். ஆக மொத்தம் 68 லட்சத்து 7 ஆயிரத்து 439 பேர் பதிவு செய்து அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை, 1 லட்சத்து 31 ஆயிரத்து 659 பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அரசு வேலைகளுக்காகக் காத்திருக்கின்றனர்.

Tags : #JOBS #TAMILNADU #GOVT JOB #GOVERNMENT EMPLOYMENT EXCHANGE