‘வெளிய தெரிஞ்சா குடும்ப மானம் போயிடும்’.. பெற்ற மகள்களுக்கு தாய் செய்த கொடூரம்.. அதிர்ந்துபோன குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 25, 2020 09:41 AM

திருச்சி அருகே பெற்ற மகள்களுக்கு தாய் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trichy mother arrested for killed his two daughters

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் காந்திநகரைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்தமீனா. இவர்களுக்கு லோகநாதன் (15), கோகிலா (13), லலிதா (11) என்ற மூன்று பிள்ளைகள். தனது கணவரின் சகோதர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்றிருந்த நிலையில், அவரின் இரண்டு மகள்களும் வீட்டுக்குள் மயக்கமடைந்து கிடந்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அவர்கள் இருவரையும் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைகாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சிறுமிகள் இருவரும் ஒன்றன்பின் ஒன்றாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனை அடுத்து சிறுமிகளின் தாய் சாந்தமீனா மணப்பாறை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அங்கு போலீசாரிடம் சாந்தமீனா அளித்த வாக்குமூலத்தில், ‘நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். எனது கணவரின் சகோதரர் வைத்திருக்கும் பணம் அவ்வப்போது காணாமல் போனது. அதை எனது மகள்தான் எடுத்தனர். இது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் போய்விடும் என்ற பயத்தில் சிறுமிகளுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன்’ என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சாந்தமீனா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.