'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!'... நீண்ட நாள் நண்பன் பாகிஸ்தானை கைவிட்டு... இந்தியாவுடன் இணைந்த சீனா!... திசை மாறுகிறதா ஆசிய அரசியல்!?
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படும் சீனா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானை கழற்றிவிட்ட நிகழ்வு ஆசிய அரசியலில் திருப்புமனையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியாவும் சீனாவும் இந்த நோயைக் கட்டுப்படுத்த ஒன்றிணைந்து செயல் பட்டு வருகின்றன. சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. அதன் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கி உள்ளது. பலியானோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தை நெருங்குகிறது.
வைரசை பரப்பிய சீனா இப்போது அங்கு வைரசை கட்டுபடுத்திவிட்டதாக கூறுகிறது. சீனாவின் போட்டி நாடுகள் தான் தற்போது இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால் சீனாவை அனைத்து நாடுகளும் குற்றம்சாட்டி வருகின்றன. சீனா தான் வைரசை பரப்பியது என்றும் அதன் பாதிப்பு கணக்குகள் போலியானவை என்றும் கூறுகின்றன. ஆனால் இந்திய தரப்பில் சீனாவை எந்த குற்றமும் கூறவில்லை. கொரோனாவை ஒழிக்க சீனாவுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது.
கடந்த வாரம் சீனாவின் மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யியுடனான வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உரையாடலில் இருந்து தெளிவாகத் தெரிகிறது.
இந்தியாவுக்கும் சீனாவிற்கும் இடையில் ஏர் இந்தியா ஒரு சரக்கு விமானப் சேவையை தொடங்கி உள்ளதாக அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்தது. இது சீனா கொரோனா வைரஸ் தோற்றத்திற்கு பொறுப்பல்ல என்பதை உலகுக்கு உணர்த்துவதை காட்டுவதாக உள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் முக்கியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு செல்வதற்கு இந்த சேவை பயன்படுகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை அவசரமாக கருத்தில் கொள்ளுமாறு மார்ச் மாதம் பாகிஸ்தான் ஐ.நா.பாதுகாப்புக் குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தது. ஆனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலைவரான சீனாவின் ஜாங் ஜூன், பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்தார். இது இந்தியாவைப் பொறுத்தவரை சீனாவுடனான உறவில் குறிப்பிடத்தக்க திருப்பு முனையாகும்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில், கடந்த ஜனவரி மாதம் வரை பாகிஸ்தானுக்கு பகிரங்கமாக வாதிட்டது சீனா. ஆனால், அந்த விவகாரத்தில் தற்போது சீனா மௌனம் காத்து வருகிறது.
இந்த நிலையில் தான் சீனாவிடம் மாற்றம் தென்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்ததாக கூறப்படுகிறது.