'எங்க ஊருக்கு வர யோசிப்பாங்க'...'ஆனா இந்த மவராசன் வந்தான்'...'இளம் மருத்துவருக்கு நேர்ந்த பரிதாபம்'...அதிர்ந்து நிற்கும் கோவை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 16, 2020 08:50 AM

யாருமே செல்ல தயங்கும் அடர்ந்த மலை பகுதியில் உள்ள கிராமத்தில். 3 வ்ருடங்கள் தங்கி சேவை செய்த இளம் மருத்துவரின் மறைவு கோவை மக்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

Coimbatore : Young Doctor who chose to serve tribals dies of dengue

கோவை மாவட்டம் சிறுமுகை ரேயான் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வி.ஜெயமோகன். பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்ற ஜெயமோகன், மருத்துவம் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என சிறு வயது முதலே ஆர்வமாக இருந்துள்ளார். அதே தாகத்துடன் மருத்துவம் படித்த அவர், தனது படிப்பை முடிந்த பின்பு, பல பெரிய மருத்துவமனைகளில் இருந்து வந்த வாய்ப்புகளை எல்லாம் உதறி விட்டு வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்படும் மக்களுக்காக உழைக்க முடிவெடுத்தார்.

அதற்கு அவர் தேர்ந்தெடுத்த இடம் தான் தெங்குமரஹாடா மலை கிராமம். சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கும் இந்த கிராமத்திற்கு செல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் அந்த கிராமத்தை சுற்றி ஓடும் மாயாறு தான். தெங்குமரஹாடா கிராமத்திற்கு செல்வதற்கு மாயாறு மூலமாக பரிசலில் சென்று பின்பு அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டும். இதன்காரணமாகவே யாரும் இங்கு பணி செய்ய வருவதில்லை. ஆனால் இந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனது பணியை தொடங்கிய ஜெயமோகன், கடந்த 3 ஆண்டுகளாக இங்கு பணி செய்து வந்துள்ளார்.

இரவு, பகல் என பாராமல் சிகிச்சை அளித்து வந்த அவர், அந்த கிராம மக்களில் ஒருவராகவே மாறி போனார். இந்நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன், கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தசூழ்நிலையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் ஜெயமோகனின் தாய் ஜோதி, விஷமருந்திவிட்டார். மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எந்த வித பிரதி பலனும் பாராமல் மருத்துவம் என்பது சேவை செய்ய மட்டும் தான் என, தனது இளம் வயதில் வாழ்ந்து காட்டிய ஜெயமோகனின் மறைவு தெங்குமரஹாடா மலை கிராம மக்களை மட்டுமல்லாது, கோவை மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.