'ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க, என் குழந்தை தவிச்சுக்கிட்டு இருக்கும்...' 'பணத்துக்கு நான் எங்க போவேன், சிங்கிள் டீ வாங்கக்கூட...' மருத்துவர் செய்த நெகிழ்ச்சி காரியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொல்கத்தா மாநிலத்தில் சிகிச்சை முடிந்த சிறுமியை 270 கிலோமீட்டர் பயணம் செய்து, வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்து மீண்டும் பணிக்கு திரும்பிய மருத்துவரை சமூகவலைத்தளங்களில் அனைவரும் பாராட்டிவருகின்றனர்.
பிர்பும் என்ற இடத்தில் கல்குவாரியில் வேலைப் பார்த்து வருகிறார் ராஜேஷ் பாஸ்கி. இவர்
கொல்கத்தாவில் இயங்கிவரும் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் தனது 8 வயது மகள் ஏஞ்சலாவிற்கு குடல் அடைப்பு சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார். சிகிச்சைக்கு பின் முழுவதுமாக குணமடைந்த ஏஞ்சலா கடந்த மார்ச் 23ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்தியாவில் கொரோனா பரவுவதை அடுத்து 144 ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் தனது மகளை வீட்டிற்கு அழைத்து செல்ல முடியாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுபவரின் உதவியை நாடியிருக்கிறார் ராஜேஷ். அவரது வீட்டில் மற்றொரு மகள் இரண்டு நாட்களாக தனியே இருப்பதால் மிகவும் கவலை அடைந்த ராஜேஷ், தனது நிலைமையை கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் உதவிக்கு கெஞ்சியுள்ளார்.
ராஜேஷ் பாஸ்கியின் வீடு மருத்துவ மனையில் இருந்து 270 கி.மீ. தாண்டி ஜார்க்கண்ட் எல்லையில் உள்ள சுலுங்கா என்ற சிறிய கிராமத்தில் இருப்பதால் அவ்வளவு தொலைவு பயணிக்க, ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ரூபாய் வரை கேட்டுள்ளனர்.
தற்போது ஊரடங்கு சூழலில் வேலையின்மையால் அவ்வளவு பணம் இல்லை என டிரைவரிடம் கெஞ்சியுள்ளார். இவர்களது உரையாடலை பின் இருந்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் சர்தார்.
ராஜேஷின் நிலைமையைப் புரிந்துகொண்ட சர்தார், அவரது குடும்பத்திற்கு உதவ முன்வந்து, தனது சொந்தக் காரில் ஏஞ்சலினா, ராஜேஷ் பாஸ்கி மற்றும் அவரது மனைவி மூவரையும் அழைத்து கொண்டு அவர்களது கிராமம் நோக்கி பயணம் செய்ய முடிவெடுத்தார்.
சுமார் 270 கிலோமீட்டர் பயணித்து அதிகாலை 3 மணிக்கு சிறுமியின் வீட்டை அடைந்துள்ளார். மேலும், டாக்டர் சர்தார் சிறுமியின் வீட்டை சென்றடைந்ததும் தான் அவர்கள் எந்த அளவிற்கு வறுமையில் வாழ்கிறார்கள் என புரிந்து கொண்டதாகவும், தனக்கு ஒரு டீ வாங்குவதற்கு கூட அவர்களிடம் பணம் இல்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் ஏஞ்சலினா தனது சகோதரியை வீட்டில் பார்த்த உடன் மிகுந்த சந்தோசத்தோடு முகம் மலர்ந்து, அவளை கட்டியணைத்ததை பார்த்தவுடன் தனக்கு மிகுந்த திருப்தி ஏற்பட்டதாக கூறினார் டாக்டர் சர்தார்.
மொத்தம் 540 கிலோமீட்டர் பயணித்த டாக்டர் சர்தார், மறுநாள் காலை எப்பொழுதும் போல காலை 10 மணிக்குள் தன் வேலைக்குச் சென்றுவிட்டார். ராஜேஷ் பாஸ்கியிடம் இவர் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் இது போன்ற நல்ல உள்ளம் படைத்த மனிதரை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். மேலும் ராஜேஸ் பாஸ்கி, தன் குடும்பமும் வாழ்நாள் முழுவதும் டாக்டருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு, மனநெகிழ்வோடு டாக்டரை பாராட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.