'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்!'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்!... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Apr 04, 2020 10:18 PM

கொரோனா வார்டில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவர், அவரது குடும்பத்தை 2 வாரங்களுக்கு முன்பு, வீட்டின் வாசலிலேயே நின்று பார்த்துவிட்டுத் திரும்பிய சம்பவம் அனைவரையும் கலங்கடித்துள்ளது.

punjab doctor reveals experience about working in covid19 ward

பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹரில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்பவர் குர்பல் கடாரியா. இவரும் இவரது குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 பேருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், கட்டாரியா கடைசியாக அவரது குடும்பத்தை 2 வாரங்களுக்கு முன்பு பார்த்து வந்துள்ளார். அப்போதும் அவர் வீட்டின் வாசலிலேயே நின்று பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டதாகக் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிற்குள் நுழையவில்லை, அவர்களைப் பார்த்துவிட்டு பின்னர் வேலையைச் செய்யத் திரும்பினேன். எனது மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் என்னிடம் கவனமாக இருங்கள் என்று கூறுவாள். நானும் எனது மனைவியும் மக்களுக்குச் சேவை செய்வதை நினைத்துப் பெருமைப்படுவாள்" எனத் தெரிவித்தார்.

நவன்ஷஹரில் இதுவரை 19 கொரோனா நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 70 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்து விட்டார். நோயாளிகள் குறித்து கட்டாரியா கூறுகையில், "நோயாளிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைப் பற்றியும் இறப்பு குறித்தும் அடிக்கடி மருத்துவரிடம் கேட்கிறார்கள். அவர்களின் மன உறுதி மிக முக்கியம். எங்களைப் பொறுத்தவரை, இது ஒரு வழிபாட்டுத் தலம் போன்றது. எங்களுடைய நோயாளிகளின் முகங்களில் மகிழ்ச்சியைக் காணும்போது நமக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. நாங்கள் எங்கள் நோயாளிகளுக்கு ஒரு வழக்கமான ஆலோசனையை வழங்குகிறோம். பயப்பட வேண்டிய அவசியமில்லை. நன்றாக இருப்பார்கள் என்று அவர்களிடம் கூறுகிறோம். நாங்கள் அவர்களை நேர்மறையான மனநிலையில் வைத்திருக்க முயல்கிறோம். மேலும், அவர்களின் மன உறுதியை உயர்த்துகிறோம். அவர்கள் இங்கே தங்கியிருப்பதாக உணர விட மாட்டோம். அவர்கள் இங்கிருந்து திரும்பிச் செல்லும்போது, அவர்கள் நிச்சயமாக எங்களை நினைவில் கொள்வார்கள். அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருத்துவ வசதிகளும் உள்ளன" என்று உணர்வுப்பூர்வமாக பதிவு செய்தார்.

மருத்துவம் என்பது தான் செய்யும் வேலை என்று கருதாமல், அதனை சேவையாக கருதும் மருத்துவர் குர்பல் கடாரியாவின் இந்த கருத்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.