கோவையில் '10 மாத குழந்தைக்கு கொரோனா வந்தது எப்படி?'... அதிர்ச்சியூட்டும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் ரயில்வே டாக்டர் மற்றும் அவரது 10 மாத குழந்தை உட்பட 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில், 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது எப்படி என்பதை விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தற்போது வரை 50 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் ஆகியுள்ளது.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த 29 வயது பெண் டாக்டர் ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 20ம் தேதி அவர் கோவை போத்தனூர் ரயில்வே மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், பணியில் சேரும்போதே அவர் காய்ச்சல் பாதிப்பில் இருந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா அறிகுறி இருந்ததால், உடனடியாக அவருடன் பழகியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். போத்தனூர் ரயில்வே மருத்துவமனை பூட்டப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்தப் பெண் டாக்டருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று நேற்று ரிப்போர்ட் வந்துள்ளது.
அவருக்கு மட்டுமல்ல, அந்த டாக்டரின் தாய், மருத்துவமனையில் பணியாற்றிய பணிப் பெண் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சோகம் என்னவென்றால், அந்த டாக்டரின் 10 மாத குழந்தைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்திருந்த இரண்டு பேருக்கு ஏற்கெனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் பயணித்த ஈரோட்டைச் சேர்ந்த இந்தியர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த ஈரோட்டைச் சேர்ந்தவர் மூலம், பெண் டாக்டருக்கு கொரோனா வந்துள்ளது.
மேலும், அந்தப் பெண் டாக்டரின் கணவர் மற்றொரு குழந்தை ஆகியோரும் கொரோனா அறிகுறியுடன் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த 4 பேருடன் சேர்த்து, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மொத்தம் 6 பேர் கொரோனா பாசிட்டிவாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
