'மச்சான் வாந்தி வருது வண்டிய நிறுத்து'... 'நொடிப்பொழுதில் பல்டி அடித்த கார்'... பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Feb 19, 2020 12:49 PM

வாந்தி வந்ததால் இரு இளைஞர்கள் உயிர் தப்பிய நிலையில், கோர விபத்தில் சிக்கி அவரது நண்பர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore : Two dead,one injured in high-speed collision

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள போடிபாளையம் குளத்தூரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய தே.மு.தி.க. செயலாளராக இருந்தார். பொள்ளாச்சி பகுதி தனியார் தொலைக்காட்சி நிருபராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரில் நண்பர்களான செந்தில்குமார், கல்லூரி மாணவர் கிஷோர், அருண், மணிகண்டன் ஆகியோருடன் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள நண்பர்களுக்கு காலண்டர், டைரி கொடுப்பதற்காகச் சென்றார். பின்னர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டனர்.

கார் தாமரைக்குளம் பகுதியில் வந்தபோது, காரில் இருந்த மணிகண்டன், அருண் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருகிறது என கூறியுள்ளார்கள். இதையடுத்து காரை நிறுத்திய சந்திரசேகர், இருவரையும் அங்கேயே  இறக்கி விட்டார். இதனைத் தொடர்ந்து சந்திரசேகர், செந்தில்குமார், கிஷோர் ஆகிய 3 பேரும் கிணற்றுக்கடவுக்குச் சென்று அங்குள்ள நண்பர்கள் சிலரைச் சந்தித்து காலண்டர் கொடுத்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்குப் புறப்பட்ட மூவரும் காரில் சென்று கொண்டிருந்தார்கள். கார் நள்ளிரவில் கல்லாங்காட்டுபுதூர் அருகே சென்றபோது, ரோட்டில் ஜல்லிகற்கள் சிதறி கிடந்ததால், கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி ரோட்டோரத்தில் உள்ள தடுப்பு கம்பி மீது பயங்கரமாக மோதி நடுரோட்டில் பல்டி அடித்து கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர் கிஷோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காரை ஓட்டி வந்த தே.மு.தி.க. பிரமுகர் சந்திரசேகர், அவரது நண்பர் செந்தில்குமார் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிருக்குப் போராடியவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திரசேகரைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ஆபத்தான கட்டத்திலிருந்த செந்தில்குமார் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக காரில் வந்த மணிகண்டன், அருண் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாகக் கூறி இறங்கியதால் இருவரும் உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது. இறந்துபோன சந்திரசேகருக்குச் செல்வி என்கிற மனைவியும், 6 வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இதற்கிடையே விபத்து குறித்துப் பேசிய காவல்துறையினர், ''விபத்து நடந்த பகுதியில் வேகத்தடை உள்ளது. அதில் ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அப்போது லாரியில் இருந்து ஜல்லிக்கற்கள் சிதறி ரோட்டில் விழுந்துள்ளது. இதன்காரணமாக வேகமாக வந்த கார் அதில் பட்டு வழுக்கி நிலைதடுமாறி இருக்கலாம். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார்  சாலையோர தடுப்புச்சுவரில் மோதி விபத்து நடந்து உள்ளது. சிதறிக்கிடந்த ஜல்லிக்கற்கள் அகற்றப்பட்டு மற்ற வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல வழிவகுக்கப்பட்டுள்ளது'' எனக் கூறினார்கள்.

Tags : #ACCIDENT #COIMBATORE #COLLISION #CAR ACCIDENT