'டாக்டர் காப்பாத்துங்க'... 'துடி துடித்த பெண்'... 'எக்ஸ்ரேவை பார்த்து ஆடிப் போன மருத்துவர்கள்'... '30 மணி' நேரம் திக் திக்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெண்ணின் உடலில் 30 மணி நேரம் சிக்கி இருந்த கத்தியை அகற்றி கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்தனர். அந்த மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி மல்லிகா. கடந்த மாதம் 25-ந் தேதி இவருக்கும் வேறு ஒரு நபருக்கும் நடந்த குடும்ப சண்டையில், அந்த நபர் மல்லிகாவைக் கத்தியால் குத்தி உள்ளார். 7 அங்குலம் கொண்ட அந்த கத்தி மல்லிகாவின் நெஞ்சு பகுதியில் இறங்கியது. இதனால் மல்லிகா அலறிய நிலையில் சரிந்து விழுந்தார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து ஓடி விட்டார்.
இதற்கிடையே மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அந்த கத்தி மல்லிகா நெஞ்சு பகுதியில் ஆழமாக இறங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அவர் மேல் சிகிச்சைக்காகக் கடந்த 26-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இதய அறுவை சிகிச்சைத்துறை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர்.
எக்ஸ்ரேவை பார்த்த மருத்துவர்கள் சற்று ஆடிப் போனார்கள். காரணம் கத்தியானது அவருடைய நெஞ்சு பகுதியில் 6 அங்குல அளவுக்கு உள்ளே இறங்கி இருப்பதும், ஒரு அங்குல கைப்பிடி மட்டும் வெளியே இருப்பதும் தான் காரணம். இந்த சூழ்நிலையில் கத்தியானது நுரையீரல் தவிர மற்ற உறுப்புகளைப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். எனவே அறுவை சிகிச்சை செய்து கத்தியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தார்கள்.
உடனே களமிறங்கிய டீன் காளிதாஸ் தலைமையில் மருத்துவக் குழு, அறுவை சிகிச்சை செய்து 30 மணி நேரம் அவரது உடலிலிருந்த கத்தியை அகற்றினார்கள். மேலும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரி செய்யப்பட்டது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.