‘பாத்ரூம் போன அப்பாவுக்கு என்ன ஆச்சு?’.. பார்க்க போன 2 மகன்களுக்கு அடுத்தடுத்து நடந்த பயங்கரம்.. கோவையை உலுக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 28, 2020 09:53 AM

கோவையில் விஷவாயு தாக்கி கழிவறையில் மயங்கி கிடந்த தந்தையை மீட்க சென்ற இரண்டு மகன்களும் அடுத்தடுத்து மயங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore man died due to leakage of poison gas into toilet

கோவை பீளமேடு ஹட்கோ வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ஸ்ரீதர்(72). இவரது மனைவி பத்மாவதி (70). இந்த தம்பதிக்கு பாலஜி (49), முரளி (45) என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை ஸ்ரீதர் கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் ஸ்ரீதர் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது மகன் முரளி கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு கழிவறைக்குள் தனது தந்தை மயங்கி கிடந்ததைப் பார்த்த முரளி உடனே தந்தை மீட்க கழிவறைக்குள் சென்றுள்ளார். உடனே அவரும் மயங்கி கழிவறைக்குள் விழுந்துள்ளார்.

தந்தையை அழைத்து வரச் சென்ற தம்பியும் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் மூத்த மகன் பாலாஜி கழிவறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தந்தையும், தம்பியும் கழிவறைக்குள் மயங்கி கிடந்தைப் பார்த்து அவர்களை மீட்க பாலாஜியும் கழிவறைக்குள் சென்றுள்ளார். ஆனால் அவரும் மயங்கி விழுந்ததைப் பார்த்த தாய் பானுமதி அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

உடனடியாக வந்த அவர்கள் மயங்கி கிடந்த மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மூத்த மகன் பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஸ்ரீதர் மற்றும் முரளி கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கழிவறையில் இருந்து விஷவாயு வெளியேறியதா? அல்லது கழிவறைக்கு அருகில் உள்ள ஜெனரேட்டர் அறையில் இருந்து விஷவாயு கழிவறைக்குள் வந்ததா? என போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.