கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக வேறு மாநிலங்களில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் நிலை கடும் வேதனைக்குள்ளாகியுள்ளது. பணமும், சொந்த ஊருக்கு செல்ல வழியில்லாமல் நடந்தும், சைக்கிள் மூலமும் சொந்த ஊர் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மணிப்பூரை சேர்ந்த பெண்கள் சிலர் அழகு நிலையங்களில் பணியாற்றி வருகின்றனர். அதில் ஜென்னி, மரியா என்ற இரண்டு பெண்கள் சாய்பாபா காலனியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். அப்போது காய்கறி வாங்குவதற்காக இருவரும் வெளியே வந்த போது, அவர்களை வழிமறித்த இளைஞர் ஒருவர், 'நீங்கள் சீனாவுக்கு செல்லாமல் ஏன் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்'? என கேட்டுள்ளார்.
பதிலுக்கு இவர்களும், நாங்கள் மணிப்பூரை சேர்ந்தவர்கள் என கூற அதை புரிந்து கொள்ளாத இளைஞர், 'கோ கொரோனா' என கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அவர்களை தாக்கவும் அந்த இளைஞர் முற்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பெண்கள் புகாரளித்தனர்.
பின்னர் விசாரித்த போலீசார், பெண்களிடம் தகராறில் ஈடுபட்ட விக்னேஷ் என்ற வாலிபரை கைது செய்தனர். சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததன் காரணமாக, பார்ப்பதற்கு சீன மக்களை போல இருக்கும் வடகிழக்கு பகுதி மக்களுக்கு நாடு முழுவதிலும் இது போன்ற கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென வடகிழக்கு மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
