'கோவில் முன்பு என்ஜினீயர் வீசிய பார்சல்'... 'திறந்தபோது வந்த நாற்றம்'... 'அதிர்ந்துபோன பூக்கடை பாட்டி'... பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தின் பின்னணி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரண்டு கோவில்களுக்கு முன்பு பன்றி இறைச்சியை என்ஜினீயர் ஒருவர் வீசி சென்ற சம்பவம், பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
கோவை வைசியாள் வீதியில் வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் உள்ளது. அதனை அடுத்து ராகவேந்திரா சுவாமிகள் கோவிலும் உள்ளது. கோவில்களுக்கு அருகே பழக்கடைகள் மற்றும் நகை பட்டறைகள் இருப்பதால் அங்கு மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகமாகக் காணப்படும். இந்நிலையில் நேற்றுகாலை 10.30 மணியளவில் ராகவேந்திர சுவாமிகள் கோவிலுக்கு பைக்கில் வந்த நபர், கோவில் முன்பு ஒரு பிளாஸ்டிக் பையை வைத்து விட்டு சென்றார்.
பின்னர் அந்த நபர் நடந்து சென்று அருகிலிருந்த வேணுகோபால கிருஷ்ணசாமி கோவில் முன்பு மற்றொரு பிளாஸ்டிக் பையை வைத்து விட்டு தனது மோட்டார் சைக்கிளை நோக்கி நடந்து வந்தார். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த, கோவிலுக்கு அருகில் பூ விற்கும் பேபி என்ற பெண், அந்த பார்சலில் என்ன இருக்கிறது எனத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. மீண்டும் என்ன இருக்கிறது எனப் பார்த்தபோது அதில் பன்றி இறைச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
அதற்குள் அந்த நபர் தான் வந்த பைக்கில் ஏறித் தப்பிச் சென்று விட்டார். இந்த சம்பவம் காட்டு தீ போலப் பரவியதையடுத்து, பா.ஜனதா மற்றும் இந்துமுன்னணி உள்பட பல்வேறு இந்து அமைப்பினர் அங்குத் திரண்டனர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டார்கள். கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த இறைச்சியை போலீசார் கைப்பற்றி விசாரணைக்காக எடுத்துச் சென்றனர்.
இதையடுத்து கோவை சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணைகமிஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. இறைச்சி வீசப்பட்ட 2 கோவில்கள் மற்றும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் இறங்கினார்கள். அதேபோன்று பூக்கடை வைத்திருக்கும் பேபி சொன்ன தகவல்கள் அடிப்படையில், கேமராவில் பதிவான காட்சியில் ஒருவரின் நடவடிக்கைகள் ஒத்துப் போக ஹரி என்ற நபரைக் கைது செய்தனர்.
சம்பவம் நடந்து 6 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளியைக் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, ''கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ஹரி, என்ஜினீயருக்கு படித்துள்ளார். திருமணமான அவருக்கு தற்போது வேலை இல்லை. கவுண்டம்பாளையத்தில் இருந்து ஒரு கிலோ இறைச்சி வாங்கி வந்து இங்கு வைத்துள்ளார். அவர் கோவில் முன்பு எதற்காக இறைச்சியை வைத்தார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
இந்த சம்பவத்தால் அங்குப் பதற்றமான சூழ்நிலை உருவானது. ஆனால் போலீசாரின் தீவிர நடவடிக்கையினால் குற்றவாளியும் கைது செய்யப்பட்டு, பெரும் பதற்றமும் தணிக்கப்பட்டுள்ளது.
In this issue FIR was registered and accused Hari has been arrested. On all matters police will take immediate action. Let’s all be Responsible on Social Media.
— Coimbatore City Police (@policecbecity) May 29, 2020