'தொட்டில் சேலை கழுத்தில் இறுகி'... '11 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 18, 2019 05:51 PM
தொட்டில் சேலை கழுத்தில் இறுகி, சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அஸ்வதி. 11 வயதான அஸ்வதி அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்துள்ளார். இவர் கோடை விடுமுறைக்காக சென்னை ஐ.சி.எப். ரெயில்வே காலனியில் உள்ள தனது மாமா வினோத்குமாரின் வீட்டுக்கு வந்திருந்தார்.
டிக்கெட் பரிசோதகரான வினோத்குமாரின் மகன் யஸ்வந்த், காய்ச்சல் காரணமாக பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தாய் ஜானகி அங்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சிறுமி அஸ்வதி உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்டு விளையாடி உள்ளார்.
அப்போது வீட்டுக்குள் கட்டப்பட்டிருந்த தொட்டில் சேலையில், சிறுமி விளையாடியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்து இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வேலை முடித்து வீடு திரும்பிய சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன், கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், ஜன்னல் வழியாக எட்டி பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சிறுமி தொட்டில் கட்டிய சேலையில், கழுத்து இறுகி அசைவற்ற நிலையில் இருந்துள்ளாள். உடனடியாக, சிறுமியை மீட்டு பெரம்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, அவள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி ஐ.சி.எப். போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ரெயில்வே காலனி குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து வந்து, தங்களது மகளின் உடலை பார்த்து சிறுமியின் பெற்றோர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது.