'தேர்தல் முடிவுக்கு முன்னரே எம்.பி. ஆன ஓ.பி.எஸ். மகன்'... 'கல்வெட்டு வைத்த முன்னாள் போலீஸ் கைது'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | May 18, 2019 04:04 PM
நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே, கோவில் கல்வெட்டில் எம்.பி என ரவீந்திர நாத்குமார் பெயர் வைத்தது தொடர்பாக முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டார்.

துணை முதல்வரான ஓ.பி.எஸ். தொகுதியில் குச்சனூர் சிலம்பு சனீஸ்வரன் கோவில் உள்ளது. அதன் அருகே தெற்கு பகுதியில், காசி ஸ்ரீ அன்னபூரணி திருக்கோயிலில் நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலயத்தின் கட்டுமான பணிக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் நன்கொடை அளித்தனர். இதையடுத்து கடந்த 16-ம் தேதியிட்டு கோவில் வளாகத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டது.
அதில் நன்கொடை அளித்தவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. அந்த கல்வெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயருக்கு கீழே, தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று ரவீந்திரநாத்குமார் பெயர் பொறிக்கப்பட்டு இருந்தது. தேர்தல் முடிவுக்கு முன்னரே தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
தீயாக பரவிய இந்த சர்ச்சையை அடுத்து நேற்று மதியம் அந்த கல்வெட்டை மறைக்க அதன்மேல் புதிய கல்வெட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் அப்படி ஒரு கல்வெட்டு வைக்கப்பட்டது இன்றுதான் என் கவனத்திற்கு வந்தது என தெரிவித்த ரவீந்தரநாத், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சின்னமனூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சர்ச்சை கல்வெட்டு தொடர்பாக குச்சனூர் கோயில் நிர்வாகியும், முன்னாள் காவலருமான சின்னமனூர் ஓடப்பட்டியை சேர்ந்த வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வேல்முருகன் கூறும்போது, ஜெயலலிதா தான் எங்களுக்கு எப்போதும் முதல்-அமைச்சர். ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்பு தேனி நாடாளுமன்ற வேட்பாளர் என பொறிக்க சொன்ன இடத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் என தவறுதலாக பொறிக்கப்பட்டு விட்டது. இது, இவ்வளவு பெரிய பிரச்சினை ஆகும் என்று நினைக்கவில்லை. எனவே அந்த கல்வெட்டை மறைத்து வேறு கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் சீருடையுடன் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர். சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க கூடாது என்று தீக்குளிக்க முயன்றார். தொடர்ந்து காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியதால் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.
