"இவ்ளோ தண்ணி நிக்குதே.. என் புருஷன காணலையே".. கொட்டும் மழையில் கண்ணீருடன் கணவரை தேடி அலைந்த பெண்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மாண்டஸ் புயல் காரணமாக, கடும் காற்று வீசிய நிலையில், மாமலப்புரம் பகுதி அருகே கரையை கடந்துள்ளது.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல், நேற்று இரவு முதல் மெல்ல மெல்ல கரையைக் கடக்கத் தொடங்கியது.
இரவு 9 மணி முதல் லேசாக காற்று வீச தொடங்கியதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அதே போல மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. கோவளம் கடற்கரை பகுதியில் கூட இந்த காற்றின் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தன.
அதிகபட்சமாக, திருவள்ளூர் மாவட்டம் காட்டுபாக்கத்தில் 142 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லி மீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 103 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது. அதே போல, சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் மணிக்கு 79 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் உத்தண்டி குப்பம் பகுதியில் கடல் நீர் புகுந்ததால் சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதாகவும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் கொட்டும் மழைக்கு மத்தியில் பெண் ஒருவர் மிகவும் பரிதாபமாக தனது கணவரை தேடியபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்.
தனது கணவரை காணவில்லை என்பதால் மிகவும் பதறி போன அந்த பெண், கண்ணீருடனும் இருந்த நிலையில், அவர் கல்லூரி ஒன்றில் கூலி வேலைக்கு சென்று விட்டு தற்போது தான் திரும்பியதாகவும் தனது வீட்டுக்குள் நீர் புகுந்துள்ள நிலையில் கணவரை காணவில்லை என்றும் தேடி செல்வதாக தெரிவித்துள்ளார்.
அவரது நிலையை கண்ட அங்கிருந்தவர்கள் மத்தியிலும் கடும் சோகமும் உருவான நிலையில், அவர்கள் அந்த பெண்ணிற்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். கணவர் நிச்சயம் கிடைப்பார் என்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும் அந்தப் பெண் தண்ணீரில் தவித்தபடியே தனது கணவரையும் அங்கிருந்து தேடிச் சென்றார்.
இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கணவரைத் தேடிச் சென்ற மனைவி குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதும், வேனுடன் குப்பத்துக்குள் சென்ற போலீசார் அந்த பெண்ணையும் அவரது கணவரையும் பத்திரமாக மீட்டு முகாமில் கொண்டு சேர்த்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
கணவரைத் தேடி அலைந்து பரிதவித்த பெண் ஒருவர் கண்ணீர் விட்டு அலைந்தது தொடர்பான செய்தி தற்போது பலரையும் மனம் வேதனை அடைய வைத்துள்ளது.