'சென்னையில்’ அடுத்த 6 நாட்களுக்கு... ‘கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும்’... கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | May 11, 2020 08:20 AM

சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும் என்றும், அதற்கான காரணம் குறித்தும் கொரோனா சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

These Six days coronavirus positive new cases will increase

சென்னையில் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில் சென்னையில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் ராயபுரம் மண்டலத்தில் ஆய்வு செய்தனர். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘அனைவரிடமும் ஒரு தாழ்மையான வேண்டுகோளை முன்வைக்கிறேன். கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை வைத்து அச்சப்பட தேவையில்லை.

ஏனென்றால் கடந்த 9 நாட்களாக கோயம்பேடு மார்க்கெட் மற்றும் வட சென்னை பகுதிகளில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் 19 கூடுதல் மருத்துவக் குழுக்கள் பரிசோதனை செய்துள்ளன. அதில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக வந்துள்ளது. தற்போது பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகமாகத்தான் இருக்கும். சென்னையில் அடுத்த 6 நாட்களுக்கு இதுபோன்ற அதிக எண்ணிக்கையில்தான் முடிவுகள் வரும். சென்னையில்தான் அதிகளவில் பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிராக நாம் நடத்தக்கூடிய போரில், மனித குலமே தன்னைத்தானே சிப்பாய்களாக மாற்றிக்கொள்ள வேண்டும். தொண்டை மற்றும் மூக்கு வழியாகதான் நோய் மிக வேகமாக பரவுகிறது. பிறருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும், தங்களை முதலில் பாதுகாக்க வேண்டும். உள்ளாடைகள் அணிவதைப் போல அனைவரும் முக கவசம் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

அறிகுறிகள் இல்லாமல் கொரோனா வருவது நல்ல செய்தி. கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது. சென்னையில் 30 சதவீத மக்கள் முக கவசம் அணிவதே இல்லை. சென்னையில் இறப்பு விகிதம் 0.68 என குறைந்துள்ளது. இந்த இறப்பு விகிதத்தை பூஜ்ஜியம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு விட்டது. சமூக இடைவெளி பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதித்து ‘சீல்’ வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள 15 மணடலங்களில் ராயபுரத்தில் தான் அதிக தொற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.