‘நள்ளிரவு’ கழிவறைக்கு வெளியே நின்று ‘அலறிய’ மனைவி.. பதறி ஓடிய கணவன்.. சென்னையில் நடந்த பயங்கரம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 11, 2020 06:08 PM

சென்னையில் நள்ளிரவு கழிவறைக்கு சென்ற பெண்ணை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chennai woman dies of snakebite who went to toilet at midnight

சென்னை கண்ணகி நகரில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களுக்கு சித்ரா, சிந்துதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர். நேற்று நள்ளிரவு 1:30 மணியளவில் வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டுள்ளது. உடனே தூங்கிக்கொண்டிருந்த சுந்தரராஜனும், ஆதிலட்சுமியும் எழுத்து வெளியே வந்துள்ளனர். அப்போது வடமாநில இளைஞர்கள் சிலர் கையில் கம்புடன் எதையோ தேடிக்கொண்டு இருந்துள்ளனர். உடனே சுந்தரராஜன் அவர்களிடம் சென்று விசாரித்துள்ளார்.

அப்போது நல்லபாம்பு ஒன்று இப்பகுதியில் சென்றதாகவும், அதை தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். உடனே சுந்தரராஜனும் கையில் கம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு தேட ஆரம்பித்துள்ளார். நீண்ட நேரமாக தேடியும் பாம்பு தென்படாததால், மனைவியை வீட்டிற்கு செல்லும்படி கூறிவிட்டு சுந்தரராஜன் மீண்டும் தேட ஆரம்பித்துள்ளார்.

இந்த சமயத்தில் ஆதிலட்சுமி கழிவறைக்கு சென்றுவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது கழிவறைக்கு வெளியே இருந்த நல்லபாம்பை ஆதிலட்சுமி கவனிக்காமல் வந்துள்ளார். உடனே பாம்பு ஆதிலட்சுமியின் காலில் கொத்தியது மட்டுமில்லாமல் அவரது காலை சுற்றுக்கொண்டு இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிலட்சுமி கூச்சலிட்டுள்ளார். ஆதிலட்சுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட கணவர் சுந்தரராஜன் மற்றம் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.

ஆனால் அதற்குள் பாம்பு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதனை அடுத்து பாம்பு கடித்து வலியில் துடித்துக்கொண்டிருந்த ஆதிலட்சுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். ஆனால் கண்ணகி நகர் பகுதிக்குள் சரியாக வழி தெரியாமல் ஆம்புலன்ஸ் வர தாமதமானதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் வீரக்குமாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வீரக்குமார் ஆட்டோ மூலம் ஆதிலட்சுமியை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிலட்சுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்தவிட்டதாக தெரிவித்துள்ளனர். கழிவறைக்கு சென்ற பெண்ணை பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.