'உன்ன பாக்கணும் போல இருக்கு தம்பி'...'வீடியோ காலில் பார்த்த துப்பட்டா'...பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 12, 2019 12:25 PM

கணவர் பிரிந்து சென்றதை தாங்க முடியாமல் இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பு தம்பியுடன் வீடியோ காலில் பேசிவிட்டு தற்கொலை முடிவை இளம் பெண் எடுத்துள்ளார்.

Tirupur young woman commits suicide after her husband breaks up

திருப்பூர் மாராப்பகவுண்டர் கார்டன் பகுதியில் வசித்து வரும் ஈஸ்வரமூர்த்தி, சரஸ்வதி தம்பதிக்கு அனிதா என்ற மகளும் அசோக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த வருடம் கணேசன் என்பவருடன் அனிதாவிற்கு திருமணம் நடைபெற்றது. அனிதா பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளித்து வந்த நிலையில், அனிதாவிற்கு அவரது கணவன் குடும்பத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து கணவருடன் தனி குடித்தனம் சென்ற அனிதாவிற்கு சில நாட்களிலேயே கணவருடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கணேசன் மனைவி அனிதாவுடன் கோபித்து கொண்டு அவரது வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் அனிதா தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், அவர் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வீட்டில் தான் தங்கி இருந்த அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்ட அவர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தெரியாமல் கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருப்பதால் மகள் படித்து கொண்டு இருக்கிறார் என கருதிய அவரது தாய் சரஸ்வதி வீட்டுக்கு வெளியே உட்கார்ந்திருந்தார். இதற்கிடையே அனிதா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தம்பிக்கு வீடியோ கால் செய்து பேசியுள்ளார்.

அப்போது அழுது கொண்டே பேசிய அனிதா ''உன்னை பாக்கணும் போல இருக்கு தம்பி'' என கூறியுள்ளார்.  இதனிடையே அனிதாவிற்கு பின்னால் மின்விசிறியில் துப்பட்டா தொங்குவதை பார்த்து அதிர்ந்து போன அசோக், ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பதை புரிந்து கொண்டு, தனது தந்தை ஈஸ்வரமூர்த்திக்கு போன் செய்துள்ளார். அப்போது தான் வெளியே இருப்பதாகவும், அனிதா வீடியோ காலில் அழுது கொண்டே பேசியதாகவும், அப்போது மின்விசிறியில் துப்பட்டா தொங்குவதை பார்த்ததாகவும் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதையடுத்து வெளியே சென்றிருந்த ஈஸ்வரமூர்த்தி பதறி கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அனிதா இருந்த அறை பூட்டப்பட்டிருந்தது. இதனால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு மின்விசிறியில் தூக்கில் அனிதா தொங்கி கொண்டு இருந்தார். உடனே தூக்கில் இருந்து இறங்கிய அனிதாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அனிதாவுக்கு திருமணம் ஆகி 1½ ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.