legend updated recent

'மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போய்விட்டு'... 'மருமகன் பண்ற காரியமா இது?'... 'இப்ப என்ன ஆச்சு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Aug 10, 2019 10:23 PM

மாமியார் வீட்டு விருந்துக்கு சென்றபோது, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தி இருந்த ஆட்டோவை கொண்டுபோய், மருமகன் செய்த காரியம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Two young men arrested for auto theft in chennai

திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் 47 வயதான ராஜேந்திரன். ஆட்டோ டிரைவரான இவர், கடந்த மாதம் 21-ம் தேதி இரவு சவாரி முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர், வழக்கம்போல் தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார் ராஜேந்திரன். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, ஆட்டோவை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், இளைஞர் ஒருவர், கள்ளச்சாவி மூலம் ஆட்டோவை திருடி செல்வது பதிவாகி இருந்தது தெரிந்தது. கேமராவில் பதிவான உருவத்தை வைத்து அப்பகுதியில் விசாரித்தபோது, சைதாப்பேட்டை பாரதிதாசன் குறுக்கு தெருவை சேர்ந்த 22 வயதான முருகன் என்பவர், ஆட்டோவை திருடிச் சென்றது தெரிந்தது. அவரையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது கூட்டாளி சைதாப்பேட்டை நகர் காலனியை சேர்ந்த ராஜி  என்பவரையும் கடந்த வெள்ளிக்கிழமையன்று போலீசார் கைது செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், கைதான முருகனின் மாமியார் வீடு, திருவொற்றியூர் எழுத்துக்காரன் தெருவில் உள்ளது. கடந்த 21-ம் தேதி முருகனை, அவரது மாமியார் வீட்டில் விருந்துக்கு அழைத்துள்ளனர். அதன்படி அங்கு வந்த முருகன் விருந்து முடித்துவிட்டு, இரவு அங்கிருந்து தனது வீட்டுக்கு திரும்பும்போது, ராஜேந்திரனின் ஆட்டோவை திருடி சென்றுள்ளார். பின்னர், சைதாப்பேட்டை நகர் காலனியை சேர்ந்த ராஜி என்பவர் உதவியுடன், ஆட்டோவை தனித்தனியாக பிரித்து புதுப்பேட்டையில் விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது. வந்தப் பணத்தில் இருவரும் மது அருந்தி ஜாலியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : #THEFT #CHENNAI #AUTO