'இதுக்காகத் தான் அவர்களை கொலை செய்தேன்'... 'இளம் தம்பதி கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Oct 08, 2019 09:09 PM
சென்னையில் முதிய தம்பதியை கொலை செய்த வழக்கில், ஓராண்டுக்குப் பின் சிக்கிய இளம் தம்பதி கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி ஐயப்பன் நகரைச் சேர்ந்த முதிய தம்பதிகளான ஜெகதீசன் மற்றும் அவரது 2-வது மனைவி விலாசினி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி, கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வீட்டில் வேலைப்பார்த்து வந்த இளம் தம்பதிகளான சுரேஷ்குமார், பூவலட்சுமி தலைமறைவாகியிருந்தனர். சுமார் 11 மாதங்களுக்குப் பின்னர் அவர்களை, கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கைதுசெய்த போலீசார், சென்னை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், ஆந்திராவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மீது பல வழக்குகள் அங்கு உள்ளதால், மனைவி மற்றும் மகனுடன் சென்னைக்கு தப்பி வந்துள்ளார். இங்கு டாஸ்மாக் ஒன்றில், ஜெகதீசனை சந்தித்த சுரேஷ்குமார் வேலை கேட்டுள்ளார். இதையடுத்து ஜெகதீசன் தனது பண்ணை வீட்டில், குடும்பத்தோடு தங்க இடம் கொடுத்து, சுரேஷ்குமாருக்கு வேலையும் கொடுத்துள்ளார். அப்போது ஜெகதீசன் மற்றும் சுரேஷ்குமார் இருவரும் தினமும் மாலை நேரத்தில் மது அருந்த சென்றனர்.
இதனால், கோபமடைந்த ஜெகதீசனின் மனைவி விலாசினி, சுரேஷ்குமாரை அவதூறாக திட்டியதுடன், வீட்டை காலிசெய்யுமாறு கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், விலாசினி மற்றும் குடிபோதையில் இருந்த ஜெகதீசனை, இரும்பு ராடால் தாக்கி கொலை செய்துள்ளார். அப்போது அவரது மனைவி பூவலட்சுமி, விலாசினி அணிந்திருந்த நகைகளை கழற்றிக்கொண்டார்.
மேலும் வீட்டில் பணப்புழக்கம் அதிகம் இருந்ததை தெரிந்துகொண்டு, பீரோவில் இருந்த பணம், நகைகளை கொள்ளையடித்துவிட்டு குழந்தையுடன் தப்பியோடியுள்ளனர். வட மாநிலங்களில் பல இடங்களில் சுற்றிய அவர்களை, கடைசியாக ஹரித்துவாரில் கங்கை நதிக்கைரை ஓரம் இருந்த குடிசைப் பகுதியில் போலீசார் கைதுசெய்துள்ளனர். தற்போது இளம் தம்பதிகள் இருவ்ரும் சிறைக்கு சென்றதால், அவர்களது 3 வயது மகன் அநாதையாகியுள்ளான்.