‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Oct 08, 2019 04:26 PM
சென்னை பாலவாக்கம் கடற்கரையில் இளைஞரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 3 -ம் தேதி சென்னை நீலாங்கரை காவல் நிலையத்துக்கு இரு இளைஞர்கள் வந்துள்ளனர். அதில் ஒரு நபர் கையில் கட்டுடன் இருந்துள்ளார். இருவரும் போலீசாரிடம், ‘நாங்கள் சென்னை பாலவாக்கம் கடற்கரையில் இருந்து பள்ளிக்கரணைக்கு சென்றுகொண்டிருந்தபோது 4 பேர் எங்களை வழி மறித்தனர். அப்போது அவர்கள் எங்களிடம் இருந்த செல்போன், பணத்தை பறிக்க முயன்றனர். தப்பிக்க முயன்றபோது அவர்கள் எங்களை தாக்க ஆரம்பித்தனர். திடீரென அரிவாளால் வெட்டி வரும்போது தடுத்ததில் உள்ளக்கையில் வெட்டு விழுந்தது. எங்களிடம் செல்போன், பணத்தை பறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். அப்போது கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர் அக்கரை செக் போஸ்ட் அருகே பைக்கில் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அந்த இடத்துக்கு விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்றுள்ளனர். அதற்குள் அந்த நபர் பாலத்தில் இருந்து குதித்து ஓடியுள்ளார். இதனால் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடந்த சிகிச்சைக்கு பிறகு அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 2 கத்திகள், 2 பைக்குகள் ஆகிவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் கைதான நபர் கோபி (புகைப்படத்தில் உள்ளவர்) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டது அவரது கூட்டாளிகளான விஜய், ராகவா, ஜெய்கணேஷ் என்பது விசாரணையில் வெளிவந்துள்ளது. இதில் கோபி மீது கொலை மற்றும் கொலை முயற்சி போன்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட கோபியின் கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களும் டிப்ளமோ இஞ்ஜினியரிங் படித்துவிட்டு பள்ளிக்கரணையில் பணியாற்றி வருகின்றனர். இருவரும் பாலவாக்கம் கடற்கரைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.