"அதை கௌரவ கொறைச்சலா நெனைச்சேன்.. ஆனா எது நிரந்தரம்னு கொரோனா மூலமா கடவுள் உணர்த்திட்டாரு!".. பழைய வேலைக்கு திரும்பிய கால் டாக்ஸி டிரைவர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 21, 2020 11:12 AM

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால், நாடு முழுவதுமுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

chennai call taxi driver turned back to his Ex Work due to Lockdown

இந்நிலையில் சென்னையின் வெறிச்சோடிய சாலைகளில் இளநீர்.. இளநீர் என்று கூவிக் கூவி விற்றுக் கொண்டிருக்கிறார் கால் டாக்ஸி டிரைவர் ஒருவர்.  இதுபற்றி பேசியுள்ள அவர், “இதே சென்னை தெருக்களில் ஒரு 10 வருஷத்துக்கு முன்னால இளநீர் வியாபாரம் செஞ்சுட்டு இருந்தேன்.. அப்புறமா கல்யாணம் ஆனதும் கால் டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சேன். மனைவி, மாமனார், 2 மகள்கள், 1 மகன் ஆகியோ குடும்பத்தில் உள்ளனர். கடைசியா விமான நிலையங்களில்தான் பெரும்பாலும் ஓட்டிகிட்டு இருந்தேன்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசியவர், “ஆனால் கொரோனா வந்த பின் விமான நிலையத்தில் டாக்ஸி ஓட்டினால் வருமானம் வர்றதில்ல. கையில் இருந்த பணமெல்லாம் செலவழிஞ்சுடுச்சு. சாப்பாட்டுக்கே வழி இல்லை. இதுக்கு மேலயும் அசிங்கம் பாக்க ஒன்னுமில்ல. ஏற்கனவே செஞ்சுகிட்ட இருந்த தொழில்தானேனு திரும்பவும் இளநீர் வியாபாரம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இதுல லாபம் தேவையில.. தினசரி உணவுக்கு பணம் கிடைச்சாலே போதும். இளநீர் விக்குற பணம்தான் எங்க பசியை போக்குது. கால் டாக்ஸி ஓட்டும்போது கவுரமா சட்டை, பேண்ட் போட்டுகிட்டு இருக்கலாம், இளநீர் விற்பனையாளரா இருந்தா லுங்கி கட்டிகிட்டு தெருத்தெருவா போகணும்னு நெனைச்சுதான் கால் டாக்ஸி ஓட்ட ஆரம்பிச்சேன். ஆனா இதுதான் நிரந்தரம், இருப்பத விட்டு பறக்க ஆசைப்படுறது உதவாதுனு கடவுள் உணர்த்தியிருக்காரு. நான் எது வேணாம்னு விட்டுட்டுப் போனேனோ அதுதான் இப்ப சோறு போடுது. இந்த தொழில் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு. அதை விட சந்தோஷம் காலை 6 மணி முதல் மதியானம் 1 மணி வரைக்கும் இளநீர் விற்க அரசு அனுமதி கொடுத்ததுதான்” என்று தன்னம்பிக்கையுடன் கண்கலங்கியுள்ளார்.