'அவர்களோட அன்பை மறக்க முடியாது’... ‘திரும்பவும் வருவேன்’... ‘முதியவரின் உணர்வுப்பூர்வமான சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், இன்று டிஸ்சார்ஸ் செய்யப்பட்ட நிலையில், அவர் கூறிய வார்த்தைகள் அம்மாநில மக்களை நெகிழ வைத்துள்ளது.
கேரள மாநிலத்தில் புதிதாகக் கொரோனா பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறையும் அதேநேரத்தில், குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் சுற்றுலாவுக்கு வந்த இத்தாலியைச் சேர்ந்த 57 வயதான ரோபட்டோ டொனிஸோவுக்கு (Roberto Tonizzo) கொரோனா இருப்பது, கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு இத்தாலிய மொழி மட்டுமே தெரியும் என்பதால், அவர் எங்கெல்லாம் சென்றார் என்ற ரூட் மேப் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர், இத்தாலி மொழி தெரிந்தவர் மூலம் அவரிடம் பேசியபோது 126-க்கும் அதிகமானோரோடு இவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. ரோபட்டோ டொனிஸோவுக்கு வேறு சில நோய்களும் இருந்ததால் உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட அவர் இன்று டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவரிடம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜாவிடம் வீடியோ காலில் பேசுகையில், ``கேரள மருத்துவத்துறைக்கு மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவுக்கு பலமுறை வந்திருக்கிறேன். ஆனால், கேரளத்தை மிகவும் நேசிக்கிறேன். இந்தமுறை துரதிர்ஷ்டவசமாகக் கொரோனா பாதித்தது. ஆனாலும், எனக்கும் மிகச் சிறந்த சிகிச்சை அளித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் மிகச்சிறப்பாகக் கவனித்துக் கொண்டனர். நல்ல உணவு வழங்கினார்கள். கேரளத்தின் அன்பை மறக்க முடியாது.
கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும் அடுத்த ஆண்டு மீண்டும் கேரளா வருவேன். இந்தச் சமயத்தில் கேரளத்தைவிட பாதுகாப்பான இடம் வேறு இல்லை. இது என் வீடு போன்றது. இங்குள்ள அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார். இதனைப் பார்த்து அங்கிருந்த மக்கள் மகிழ்ந்து போயினர்.