இந்த நேரத்தில் 'அலட்சியம்' என்ற வார்த்தையை பயன்படுத்தலாமா?-அமைச்சர் விஜயபாஸ்கர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 21, 2020 12:09 AM

இதுபோன்ற நேரத்தில் அலட்சியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஏற்புடையதல்ல என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருக்கிறார்.

It is not a time to play Political game; Minister Vijayabaskar

சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர்,'' தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,109 பேருக்கு சோதனை மேற்கொண்டுள்ளோம். வழக்கத்தை விட இன்று தான் நாம் அதிக எண்ணிக்கையிலான பரிசோதனையை மேற்கொண்டு இருக்கிறோம். தமிழகத்தில் இன்று 2 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்கள் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் அளவுக்கு நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். கண்ணுக்கு தெரியாத எதிரியுடன் நாம் போரிட்டுக் கொண்டிருக்கிறோம். இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. தமிழகத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை முதல்வர் எடுத்து வருகிறார். இந்த நேரத்தில் அரசின் அலட்சியம் என்று எதிர்க்கட்சிகள் கூறுவதற்கோ சமூகவலைதளங்களில் குதர்க்கமான அரசியல் செய்வதற்கோ நேரம் அல்ல.

மூத்த மருத்துவர் கொரோனாவால் உயிரிழந்து இருப்பது வருத்தமாக உள்ளது. தனக்கு கொரோனா இருப்பதை அறிந்ததும் அவர் தனியார் மருத்துவமனையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவர் மீண்டு வருவார் என நினைத்திருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இறந்து விட்டார். இதுபோன்ற சூழலில் அலட்சியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது ஏற்புடையது அல்ல,'' என தெரிவித்து இருக்கிறார்.