‘கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் மருந்து’... ஆய்வில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்... ‘எச்சரித்த’ இந்திய மருத்துவ கவுன்சில்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Apr 20, 2020 10:14 PM

கொரோனாவை தடுக்கும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளால் பக்க விளைவுகள் ஏற்படும் என மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hydroxychloroquine could have side effects, suggests new study by ICMR

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு மலேரியாவுக்கு பயன்படுத்தும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்துகளை உட்கொள்ளலாம் பல நாடுகள் கூறின. இதனால் அதிகளவில் அந்த மாத்திரைகளை உற்பத்தி செய்யும் இந்தியாவில் இருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் லட்சக்கணக்கில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆனால் இவற்றை சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, குமட்டல், ரத்தத்தில் சர்க்கரை குறைவு போன்ற பிரச்சினைகள் இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே இந்திய மருத்துவ கவுன்சில் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தடுப்பு மருந்தாகவோ, தீர்வாகவோ இதுவரை அங்கீகரிக்கவில்லை. அதை தீவிர பாதிப்புக்கு உட்பட்டவர்களுக்கும், கொரோனா வார்டில் பணியாற்றும்  மருத்துவர்களுக்கும் அவர்களுடன் தொடர்பில் இருந்த குடும்பத்தாருக்கும் மட்டுமே தருவதற்கு பரிந்துரைத்துள்ளது. சுயமாக எடுத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை.

இந்தநிலையில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரை சம்பந்தமாக இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு மேற்கொண்டது. 35 வயது உடையவர்களை சராசரி வயதாக கணக்கில் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 10 சதவீதம் பேருக்கு வயிற்று வலி இருப்பதும், 6 சதவீதம் பேருக்கு குமட்டல் இருப்பதும், 1.3 சதவீதம் பேருக்கு ரத்த சர்க்கரை குறைவு இருப்பதும் தெரிய வந்தது. இதனால் ஏற்படும் பக்க விளைவு குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் தேவையில்லாமல் இந்த மருந்துகளை சுயமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.