காய்ச்சல் இருக்கவங்க இனி... 'ஓடவும்' முடியாது ஒளியவும் முடியாது... செம 'ட்ரிக்குடன்' களமிறங்கும் 'சென்னை' போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 21, 2020 01:08 AM

கொரோனா பாதிப்பை கண்டறிய 14 நாட்கள் ஆவதால், புதிய பாணியை சென்னை போலீசார் கையில் எடுத்து களமிறங்க உள்ளனர்.

Chennai Police decide to use Drones to Track Corona infected Person

தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து போலீசார் கொரோனா பரவலை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர். ஆனால் போலீசாரின் கெடுபிடிகளையும் மீறி மக்களின் நடமாட்டம் சென்னையில் அதிகமாக உள்ளது.

மேலும் கொரோனா தொற்று ஒருவருக்கு இருக்கிறதா? என்பதை கண்டறிய 14 நாட்கள் ஆகிறது. அதற்குள் அவரிடம் இருந்து மேலும் பலருக்கும் கொரோனா பரவிவிடுவதால் முன்கூட்டியே கொரோனா இருப்பவர்களை கண்டறிவது மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கிறது. இதனால் கொரோனா இருப்பவர்களை முன்கூட்டியே கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக ட்ரோன் கேமராக்களை பயன்படுத்த போலீசார் பயன்படுத்த இருக்கின்றனர். இதன்படி கொரோனா நோயை கண்டுபிடிக்கும் அகச்சிவப்பு கதிர்களை பாய்ச்சும் கேமரா டிரோன்களில் இணைக்கப்பட்டு பறக்க விடப்படும். இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இண்டர்நெட் இணைப்பு மூலம் கம்ப்யூட்டரில் பார்க்க முடியும்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் அறிகுறியுடன் ஒருவர் நடமாடினால் அவர் மீது இந்த கதிர்கள் பாய்ந்து காட்டி கொடுத்து விடும். 98.5 பாரன்ஹூட் வெப்ப நிலையை தாண்டி அதிக உடல் வெப்பத்துடன் வெளியில் சுற்றுபவர்கள் இந்த நவீன கேமராக்கள் மூலம் கண்டுபிடிக்கப்படுவார்கள். அவர்களின் புகைப்படத்துடன் கம்ப்யூட்டரில் எச்சரிக்கை தகவல்களை உடனடியாக வழங்கி விடும்.

இதனை கம்ப்யூட்டரில் பார்த்து காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களை எளிதாக கண்டுபிடிக்க முடியும். சாதாரண பறக்கும் கேமராக்கள் மூலம் காட்சிகளை மட்டுமே போலீசார் பதிவு செய்து வந்த நிலையில் இந்த நவீன பறக்கும் கேமரா கொரோனா பாதித்த நபர்களை உடனடியாக கண்டுபிடிக்க உதவும் என்று போலீசாரும், சுகாதாரத்துறையினரும் நம்புகிறார்கள்.

கொரோனா அறிகுறியுடன் வெளியில் சுற்றுபவர்கள் மீது இந்த நவீன கேமராவை பயன்படுத்துவது பற்றிய ஆய்வுகளை சென்னை மாநகர போலீசார் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு இருந்தனர். கோயம்பேடு மார்க்கெட், மண்ணடி, திருவொற்றியூர், மயிலாப்பூர், ஐஸ்அவுஸ், தண்டையார்பேட்டை, அபிராமபுரம், திருவல்லிக்கேணி, ராயபுரம், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நவீன கேமராக்களை பயன்படுத்தி சோதனை ஓட்டமும் நடைபெற்று உள்ளது. முதல் கட்டமாக கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த பறக்கும் ட்ரோன் குறித்து, ''ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை பிடிப்பதற்காக ஏற்கனவே பறக்கும் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த சென்னை மாநகர போலீசார் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டுவந்தாலும் பொதுமக்கள் வெளியில் நடமாடுவது காலையில் நேரத்தில் குறைவதே இல்லை.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 15 ஆயிரம் சிறு வியாபாரிகள் காய்கறி வாங்குவதற்காக வருகிறார்கள். இவர்களில் யாருக்காவது கொரோனா இருந்தால் உடனடியாக மற்றவர்களுக்கு வேகமாக பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து கொரோனாவை கண்டுபிடிக்கும் கேமராவை கோயம்பேட்டில் இருந்து பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இன்னும் சில தினங்களில் அது பயன்பாட்டுக்கு வரும்.

இதேபோன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மண்ணடி, பாரிமுனை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 100 இடங்களிலும் இந்த பறக்கும் கேமரா மூலம் கண்காணிக்க உள்ளோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.