நான் 'கத்துறது' யாருக்காவது கேக்குதா...? சென்னை 'நேப்பியர் பிரிட்ஜ்' கீழே கேட்டுக்கொண்டே இருந்த குரல்...! - என்ன நடந்துச்சு...?
முகப்பு > செய்திகள் > தமிழகம்செல்ஃபி மோகத்தால் இளைஞர் ஒருவர் கூவம் ஆற்றில் விடிய விடிய தத்தளித்த சம்பவம் இன்று (11-08-2021) நடந்துள்ளது.

சென்னையில் மிகவும் பிரபலமான இடம் நேப்பியர் பாலம். அங்கு இரவு நேரங்களில் மின்னும் ஒளியில் அந்த இடமே ஜொலிக்கும். இதனைக் காணவே பலர் இரவு நேரங்களில் அங்கு வருவதுண்டு.
இந்நிலையில், நேற்று பெரியமேட்டைச் சேர்ந்த கார்த்தி என்பவர், நேப்பியர் பாலத்திற்கு முன்பு நின்று தனது செல்போனில் செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது சுமார் இரவு 10 மணி போல எதிர்பாராத விதமாக கூவம் ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
ஆனால், கார்த்தி விழுந்ததை அந்நேரத்தில் அங்கிருந்த யாரும் கவனிக்கவில்லை. பல முறை கத்தியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. அவர் வைத்திருந்த செல்போனும் நீரில் விழுந்ததால் யாரையும் உதவிக்கு அழைக்க முடியவில்லை.
பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சேற்றில் சிக்கிய கார்த்தி தட்டுத்தடுமாறி வந்து நேப்பியர் பாலத்தின் கீழே நின்றுள்ளார்.
விடிய விடிய பாலத்தில் கீழே நின்ற கார்த்தி, இன்று காலை விடிந்ததும் கூச்சலிட்டு கத்தியுள்ளார். அப்போது பாலத்தின் கீழே இருந்து சத்தம் கேட்ட பொதுமக்கள், அண்ணா சதுக்கம் போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கயிறு மூலம் கார்த்தியை பத்திரமாக மேலே இழுத்து முதலுதவி செய்தனர்.

மற்ற செய்திகள்
