"ஆசையா தாத்தா வீட்டுக்கு போன 10-ஆம் வகுப்பு மாணவி!".. 'ஒரு நொடியில்' உயிரைப் பறித்த செல்போன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கரூர் மாவட்டத்தில் தனது தாத்தா வசிக்கும் அபார்ட்மென்ட்டின் 5-வது மாடியிலிருந்து செல்பி எடுக்க முயன்ற பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் நகர் பகுதியில் உள்ள எல்ஜிபி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் - உமாதேவி தம்பதியினர். கரூர் நகர மின்வாரிய அலுவலகத்தில் உமாதேவி பணிபுரிந்து வரும் நிலையில், இந்த தம்பதிக்கு 15 வயது நிரம்பிய விஷாலினி என்கிற மகள் உள்ளார்.
புன்னம்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த விஷாலினி கொரோனா ஊரடங்கினால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து இருந்ததோடு போரடித்ததால் செல்போனை வைத்துக்கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாத்தா தங்கியிருக்கும் அபார்ட்மெண்ட் சென்று அதன் ஐந்தாவது மாடியின் உச்சிக்கு சென்று தனது நண்பர்களுக்கு அனுப்ப ஏதுவாக ஒரு செல்ஃபி எடுக்க முனைந்திருக்கிறார். ஆனால் மொட்டை மாடியில் சுவரில் ஏறி செல்ஃபி எடுக்க முயற்சி செய்த அவரோ கால் தவறி கீழே விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளார்.
இதனால் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை தூக்கிக் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் விஷாலினியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததாக, கூறியதை அடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு, “ஏற்கனவே விஷாலினி இறந்துட்டாங்க” என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கரூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபி எடுக்கப் போய் 5வது மாடியில் இருந்து பத்தாம் வகுப்பு மாணவி தவறி விழுந்து இறந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.